செய்திகள்

நைஜீரியா எரிவாயு சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து - 18 பேர் பலி

Published On 2018-09-10 20:55 GMT   |   Update On 2018-09-10 20:55 GMT
நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 18 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #NigeriaGasExplosion
அபுஜா :

நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் நசரவா எனும் மாகாணம் அமைந்துள்ளது, அதன் தலைநகர் லபியாவில் எரிவாயு சேமிப்பு கிடங்கு உள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை கிடங்கில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது. இதனை தொடர்ந்து அங்கு பயங்கர தீ விபத்தும் ஏற்பட்டது.

இதனால், அருகே உள்ள சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என இந்த திடீர் விபத்தில் 18 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் அறிந்து விபத்து நிகழ்ந்த பகுதிக்கு விரைந்த மீட்பு மற்றும் தீயனைப்பு படையினர் அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய நைஜீரிய செனட் அதிபர் புகோலா சராகி, இது ஒரு எதிர்பாராத கொடூரமான நிகழ்வு என தெரிவித்துள்ளார்.

நைஜீரிய நகரங்களில் உள்ள பெரும்பாலான எரிவாயு கிடங்குகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு ஈடுபடாத காரணத்தால் அங்கு அடிக்கடி இதுபோன்ற திடீர் விபத்துகள் நிகழ்வது குறிப்பிடத்தக்கது. #NigeriaGasExplosion
Tags:    

Similar News