செய்திகள்

2 மணி நேரத்தில் தன்னை சித்திரமாக தீட்டிய நைஜீரிய சிறுவனை பாராட்டிய பிரான்ஸ் அதிபர்

Published On 2018-07-06 11:43 GMT   |   Update On 2018-07-06 11:43 GMT
நைஜீரியா நாட்டில் சுற்றுப்பயணம் செய்த பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் 2 மணி நேரத்தில் தன்னை சித்திரமாக தீட்டிய 11 வயது சிறுவனை மனமுவந்து பாராட்டினார்.
லாகோஸ்:

நைஜீரியா நாட்டில் சுற்றுப்பயணம் செய்த பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் 2 மணி நேரத்தில் தன்னை சித்திரமாக தீட்டிய 11 வயது சிறுவனை மனமுவந்து பாராட்டினார்.

பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல்மேக்ரான் இருநாள் அரசுமுறை பயணமாக நைஜீரியா நாட்டுக்கு வந்துள்ளார்.

அபுஜா நகரில் நைஜீரிய அதிபர் முஹம்மது புஹாரியை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக மேக்ரான் ஆலோசனை நடத்தினார்.


பிரான்ஸ் நாட்டில் வரும் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள நைஜீரியா கலாசார விழா தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்காக இங்குள்ள லாகோஸ் நகருக்கு கடந்த செவ்வாய்கிழமை எம்மானுவேல் வந்தார்.

இங்குள்ள நியூ ஆப்பிரிக்கா ஷ்ரைன் என்னும் ஓவிய கலைக்கூடத்தை அவர் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரான்ஸ் அதிபர் அங்கு வரும் தகவல் தெரிந்ததும் ஓவியக் கலையில் ஆர்வம்கொண்ட கரீம் வாரிஸ் ஒலமிலேக்கான் என்ற 11 வயது சிறுவன், பென்சில் மற்றும் கரி ஆகியவற்றை பயன்படுத்தி இரண்டு மணி நேரத்துக்குள் எம்மானுவேல் மேக்ரானை அழகிய சித்திரமாக தீட்டி முடித்தான்.


மிகவும் தத்ரூபமாக அமைந்திருந்த அந்த சித்திரத்தை கண்டு ஆச்சரியம் அடைந்த பிரான்ஸ் அதிபர் அந்த சிறுவனை மகிழ்ச்சியுடன் பாராட்டி, ஆசி கூறியதுடன் இந்த சம்பவத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் படத்துடன் பதிவிட்டுள்ளார். #NigerianArtist #EmmanuelMacronportrait 
Tags:    

Similar News