செய்திகள்

இந்தோனேசியாவிற்கு தனியாக விமானத்தில் சென்ற 12 வயது ஆஸ்திரேலிய சிறுவன்

Published On 2018-04-24 08:16 GMT   |   Update On 2018-04-24 08:16 GMT
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 12 வயது சிறுவன் தனது தாயுடன் ஏற்பட்ட தகராறில் தனியாக விமானத்தில் இந்தோனேசியா சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கான்பெரா:

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் தனது தாயுடன் ஏற்பட்ட சண்டையில் வீட்டிலிருந்து வெளியேறினான். சாகச பயணங்களை மிகவும் விரும்பும் இச்சிறுவன் தனது பெற்றோரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி இந்தோனேசியாவிற்கு சென்றான்.

முதலில் சிட்னியிலிருந்து பெர்த் நகருக்கு சென்று அங்கிருந்து இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவிற்கு சென்றான். அங்கு 4 நாட்கள் விடுதியில் தங்கியிருந்தான். அங்குள்ள நீச்சல் குளத்தில் விளையாடுவது போன்ற வீடியோவை பார்த்த சிறுவனின் நண்பர் அதனை பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து இந்தோனேசியா போலீசார் சிறுவனை கண்டுபிடித்தனர். பின்னர் சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் துணை இல்லாமல் சிறுவர்கள் விமானத்தில் பயணம் செய்ய முடியாத நிலையில் இந்த சிறுவன் எவ்வாறு பயணம் செய்தான் என்பது குறித்து அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுவன் எந்த குற்றமும் செய்யாத நிலையில் அவனுடைய பாஸ்போர்ட்டிற்கு தடை விதிக்க முடியாது என போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பேசிய சிறுவனின் தாய், நாங்கள் விடுமுறையின் போது பாலி தீவிற்கு சென்றோம். அதிலிருந்து எங்கள் மகன் பாலிக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஒருமுறை அவனே விமான டிக்கெட் பதிவு செய்ய முயற்சி செய்தான். அவனை நாங்கள் சமாதானம் செய்து வைத்திருந்தோம். அவன் சாகச பயணங்கள் மீது மிகுந்த ஆசை கொண்டவன். அதனால் தனியாக அவ்வளவு தூரம் சென்று விட்டான் என கூறினார். இச்சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News