செய்திகள்

மக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் - அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா

Published On 2018-04-23 14:49 GMT   |   Update On 2018-04-23 14:49 GMT
அதிபரின் அதிகாரத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் மக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்து இன்று ராஜினாமா செய்துள்ளார். #Armenia #SerzhSargsyan
எரவென்:

ஆசியா-ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள அர்மேனியா நாட்டில் சுமார் 30 லட்சம் வாழ்ந்து வருகின்றனர்.

முன்னர் ரஷியா தலைமையிலான சோவியத் யூனியனில் அர்மேனியா நாடும் ஒரு அங்கமாக இருந்தபோது ரஷிய ராணுவத்தில் பணியாற்றியவர் செர்ஸ் சர்கிசியான். முன்னாள் அதிபர் அர்மேன் காலத்தில் இருமுறை பிரதமராக பதவி வகித்தார். பின்னர், கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2013-ம் தேர்தலிலும் போட்டியிட்டு அதிபராக வெற்றிபெற்ற இவரது பதவிக்காலம் 9-4-2018 அன்று முடிவடைந்த நிலையில், பிரதமராக கடந்த வாரம் பொறுப்பேற்றார். செர்ஸ் சர்கிசியானின் அதிகாரத்தை வலுப்படுத்தவே ஆளும்கட்சியினர் அவரை பிரதமராக தேர்வு செய்ததாக எதிர்க்கட்சிகள் கருதின.

பிரதமர் பதவிக்கு வந்தவுடன் அதிபரிடம் உள்ள அதிகாரங்களை எல்லாம் பிரதமருக்கு மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட செர்ஸ் சர்கிசியான், பாராளுமன்ற ஆட்சிமுறையை அர்மேனியாவில் கொண்டு வர முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.

பிரதமர் பதவியில் இருந்து அவர் உடனடியாக விலக வேண்டும் என எதிர்க்கட்சியினருடன் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுடன் செர்ஸ் சர்கிசியான் நடத்திய சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் இங்கிருக்கும் அரசியல் குழப்பங்களை அண்டைநாடான அசர்பைஜான் சாதகமாக்கி கொள்ளலாம் என மக்கள் கருதினர்.

இந்நிலையில், கடந்த பத்து நாட்களுக்கும் மேல் மக்கள் நடத்திவந்த தொடர் போராட்டத்துக்கு அடிபணிந்த செர்ஸ் சர்கிசியான்(64) பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
Tags:    

Similar News