செய்திகள்

ஏமன் நாட்டில் சவுதி விமானப் படை தாக்குதலில் 20 பேர் பலி

Published On 2018-04-21 13:56 GMT   |   Update On 2018-04-21 13:56 GMT
ஏமன் நாட்டின் தென்மேற்கில் உள்ள டய்ஸ் மாகாணத்தில் சவுதி விமானப் படைகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சனா:

ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

அவ்வகையில், ஏமன் நாட்டின் தென்மேற்கில் உள்ள டய்ஸ் மாகாணத்தில் உள்ள ஹவுத்தி போராளிகள் முகாமை குறிவைத்து சவுதி விமானப் படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சந்தேகத்துக்குரிய ஒரு காரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இறந்தவர்களில் ஆறுபேரை மட்டுமே அடையாளம் காண முடிந்ததாகவும், மீதி 14 பேர் அடையாளம் கண்டுபிடிக்க முடியாதவாறு கரிக்கட்டைகளாக கிடந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் ஹவுத்தி போராளிகளா? அல்லது, அப்பாவி பொதுமக்களா? என்பது தொடர்பான சரியான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
Tags:    

Similar News