செய்திகள்

வடகொரியாவுக்கு புதிய பொருளாதார தடைகளை விதித்த டிரம்ப்

Published On 2018-02-24 05:39 GMT   |   Update On 2018-02-24 05:39 GMT
அணு ஆயுத சோதனைகள் மூலம் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை உருவாக்கி உள்ள வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளார்.
நியூயார்க்:

கொரிய தீபகற்பத்தில் தென்கொரியாவுக்கு அச்சுறுத்தலாக திகழும் வடகொரியா, அவ்வப்போது அணுகுண்டு, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஐ.நா. விதித்த பல்வேறு தடைகளையும் மீறி வடகொரியா செயல்பட்டு வருகிறது. டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் வடகொரியா செயல்பாட்டிற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது. எச்சரிக்கையையும் மீறி வடகொரியா செயல்பட்டதால் அந்நாட்டு மீதான பொருளாதார தடைகளை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.



இதன்படி, இதுவரை இல்லாத அளவுக்கு வடகொரியாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா தற்போது விதித்துள்ளது. வடகொரியாவின் கப்பல் நிறுவனங்களுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அடாவடி நடவடிக்கையில் ஈடுபடும் வடகொரியா, அணு ஆயுத பொருட்கள், ஏவுகணை உற்பத்தி பொருட்கள் வாங்குவதை தடுக்கும் முயற்சியாக இந்த தடை அமையும் என்று தெரிகிறது. இந்த புதிய தடை நடவடிக்கையானது கப்பல்கள் மற்றும் கடல்வழி போக்குவரத்து நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளன.  இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ள கப்பல்களும், நிறுவனங்களும் எங்குள்ளன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

"வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்களுக்கு நிதி மற்றும் எரிபொருள் வழங்கவும், அதன் ராணுவத்தை நிலைநாட்டவும் உதவும் வகையில் செயல்படும் கப்பல்கள், கப்பல் நிறுவனங்கள், தனிநபர்கள் என மொத்தம் 56 இலக்குகளை குறி வைத்து விரைவில் இவற்றுக்கான வருவாய் மற்றும் எரிபொருள் ஆதாரங்களை துண்டிக்கும் வகையில் புதிய நடவடிக்கைகளை கருவூலத் துறை விரைவில் துவங்கும். தற்போது விதிக்கப்பட்டுள்ள தடை மூலம், நேர்மறையான சில நிகழ்வுகள் துவங்கும் என நம்புகிறேன்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  #tamilnews
Tags:    

Similar News