செய்திகள்

20 லட்சம் டாலர் லஞ்சம் பெற்ற ரஷிய முன்னாள் மந்திரிக்கு 8 ஆண்டுகள் சிறை

Published On 2017-12-16 09:57 GMT   |   Update On 2017-12-16 09:57 GMT
அரசுக்கு இழப்பு ஏற்படும் வகையில் அறிக்கை தயாரிப்பதற்காக 20 லட்சம் டாலர் லஞ்சம் பெற்ற ரஷிய நாட்டின் முன்னாள் நிதி மந்திரிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ:

ரஷியாவில் நிதி மந்திரியாக இருந்த அலெக்சேய் உல்யுக்காயேவ்(61) மீது கடந்த ஆண்டு ஊழல் புகார் எழுந்தது. ரஷியா நாட்டு மைய அரசுக்கு சொந்தமான ரோஸ்னெப்ட் என்ற பெட்ரோலிய நிறுவனம், பஷ்கோர்ட்டோஸ்தான் குடியரசில் இயங்கிவரும் பேஷ்னெஃப்ட் பெட்ரோலிய நிறுவனத்துக்கு சொந்தமான 50 சதவீதம் பங்குகளை வாங்க தீர்மானித்தது.

இந்த பங்குகளை வாங்குவது தொடர்பான சாதக - பாதகங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ரஷிய நாட்டின் நிதித்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, ஆய்வு நடத்தியபோது பேஷ்னெஃப்ட் பெட்ரோலிய நிறுவனத்தின் பாதகமான அம்சங்களை மறைத்து, சாதகமான அம்சங்களை சற்று தூக்கலாக காட்டி அறிக்கை தயாரிப்பதற்காக 20 லட்சம் டாலர்களை லஞ்சமாக தர வேண்டும் என ரஷிய நாட்டின் நிதித்துறை மந்திரியான அலெக்சி உல்யுக்காயேவ் என்பவர் பேஷ்னெஃப்ட் பெட்ரோலிய நிறுவனத்திடம் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த நிறுவனமும் சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் பேஷ்னெஃப்ட் பெட்ரோலிய நிறுவனத்துக்கு சொந்தமான 50 சதவீதம் பங்குகளை ரோஸ்னெப்ட் நிறுவனம் 500 கோடி டாலர்களுக்கு வாங்கியது.

இந்த ஊழலுக்காக பேஷ்னெஃப்ட் பெட்ரோலிய நிறுவனத்திடம் இருந்து 20 லட்சம் டாலர்களை லஞ்சமாக வாங்கியபோது நிதித்துறை மந்திரி அலெக்சி உல்யுக்காயேவ்-வை ரஷிய நாட்டின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.



பல ஆண்டுகளாக ரஷியா நாட்டின் மத்திய வங்கியின் தலைவராக பொறுப்பு வகித்துவந்த அலெக்சி உல்யுக்காயேவ் கடந்த 2013-ம் ஆண்டு அந்நாட்டின் நிதி மந்திரியாக பதவியேற்றார். 20 லட்சம் டாலர்களை லஞ்சமாக வாங்கியதாக பிடிபட்ட இவர்மீது நடைபெற்றுவந்த வழக்கில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

மேலும், 22 லட்சம் டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சமீபகால ரஷிய வரலாற்றில் ஊழல் வழக்கில் சிறைக்கு செல்லும் முதல் முன்னாள் மந்திரி அலெக்சேய் உல்யுக்காயேவ் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News