செய்திகள்

ரஷிய அதிபர் தேர்தலில் புதின் சுயேட்சையாக போட்டி

Published On 2017-12-15 06:25 GMT   |   Update On 2017-12-15 06:25 GMT
ரஷிய அதிபர் தேர்தலில் எந்த கட்சியையும் சாராமல் சுயேட்சையாக போட்டியிட போவதாக அதிபர் விளாடிமிர் புதின் அறிவிப்பை வெளியிட்டார்.

மாஸ்கோ:

ரஷிய அதிபராக விளாடிமிர் புதின் பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் முடிவடையும் நிலையில் அடுத்த ஆண்டு (2018) மார்ச் மாதம் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட் டுள்ளது.

அதில் புதின் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் எந்த கட்சியையும் சார்ந்தவர் அல்ல. இருந்தாலும் ஆளும் ஐக்கிய ரஷிய கட்சி சார்பில் போட்டியிட்டார். ஆனால் இந்த தடவை எந்த கட்சியையும் சாராமல் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

அதற்கான அறிவிப்பை நேற்று அவர் வெளியிட்டார். மாஸ்கோவில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் ரஷியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 1600 நிருபர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர் இந்த தகவலை தெரிவித்தார்.

அப்போது, “இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் மூலம் எனக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளின் ஆதரவு கிடைக்கும். எனக்கு எதிராக கடும் போட்டி நிலவ வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

ஆனால் எனக்கு எதிராகவும் இறங்குபவர்கள் ரஷியாவின் ஸ்திரதன்மையை குலைக்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள் என்றார். மேலும் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி குறித்து கேட்டபோது, இவர் பல்வேறு கிரிமினல் வழக்குகளில் சிக்கியிருப்பதால் தேர்தலில் போட்டியிட முடியாது என்றார்.

அவருக்கு எதிராக தேர்தலில் போட்டியிட உள்ள டி.வி. பெண் தொகுப்பாளர் செனியா சோபக் குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த புதின், “ரஷியாவில் புரட்சி ஏற்படுவதை விரும்புகிறீர்களா? மெஜாரிட்டி ரஷியர்கள் அதை விரும்பமாட்டார்கள் என நிச்சயமாக நம்புகிறேன் என்றார்.

Tags:    

Similar News