செய்திகள்

வங்காளதேசம்: பெண்கள் வயல் வேலைக்கு செல்ல தடை விதித்த மதத் தலைவர் கைது

Published On 2017-12-13 10:50 GMT   |   Update On 2017-12-13 10:50 GMT
வங்காளதேசம் நாட்டில் பெண்கள் வயல் வேலைக்கு செல்ல தடை (பத்வா) விதித்த இஸ்லாமிய மதத் தலைவர் மற்றும் 5 இமாம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டாக்கா:

இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறையில் இருக்கும் வங்காளம் தேசம் நாட்டில் முன்னர் பெண்கள் கொத்தடிமைகள் போல் நடத்தப்பட்டு வந்தனர். வீடுகளுக்குள்ளே முடங்கி கிடந்த அவர்கள் பிற்காலத்தில் மெல்ல,மெல்ல ஆண்களுக்கு நிகராக வெளி வேலைகளுக்கு செல்ல தொடங்கினர்.

தற்போது அந்நாட்டில் உள்ள 40 லட்சம் தொழிலாளர்களில் சுமார் 80 சதவீதம் பேர் பெண்களாக காணப்படுகின்றனர். நாடு முழுவதும் உள்ள சுமார் 4500 ஜவுளி தொழிற்சாலைகளில் இவர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இந்நிலையில், வங்காளதேசம் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள குமர்காலி நகரில் உள்ள மசூதி ஒலிபெருக்கியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜும்மா தொழுகைக்கு பின்னர் ஒரு மத அறிவிப்பு (பத்வா) வெளியானது.

அப்பகுதியில் உள்ள பெண்களில் யாரும் இன்று முதல் வயல் வேலைகளுக்கு செல்ல கூடாது என்று உத்தரவாக வெளியான அறிவிப்பு அந்நாட்டின் மனித உரிமை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது.

மதத் தலைவர்கள் இதுபோன்ற பொது அறிவிப்புகளை (பத்வா) வெளியிடுவதற்கு கடந்த 2001-ம் ஆண்டு அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது. பின்னர், இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் அந்த தடையை நீக்கி உத்தரவிட்டப்பட்டது.

மதம் சார்ந்த விவகாரங்களில் உடலுக்கு காயம் விளவிக்காத உத்தரவுகளை இமாம்கள் பிறப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பெண்களில் யாரும் வயல் வேலைகளுக்கு செல்ல கூடாது என்று மத உத்தரவு (பத்வா) பிறப்பித்த குமர்காலி பகுதி மதத் தலைவர் மற்றும் அங்குள்ள 5 மசூதிகளின் இமாம்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் 6 பேரின் மீதும் ராணுவ காலத்து சிறப்பு அதிகார சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News