செய்திகள்

நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய மசூதி தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்

Published On 2017-11-22 07:54 GMT   |   Update On 2017-11-22 07:54 GMT
நைஜீரியாவில் உள்ள மசூதியில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்:

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் அடமாவா மாநிலத்தின் முபி நகரில் மசூதி உள்ளது. நேற்று இந்த மசூதிக்குள் புகுந்த போகோ ஹராம் தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான்.

இந்த தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அடமாவா மாநில காவல்துறை செய்தி தொடர்பாளர் ஒத்மான் அபூபக்கர் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



இந்நிலையில், நைஜீரியாவில் மசூதிக்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஐ.நா. சபை துணை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ஐ.நா. சபை பொதுச்செயலாளர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிராக நைஜீரிய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்’ என கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News