செய்திகள்

அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட தயாரா?: ஹிலாரிக்கு டிரம்ப் சவால்

Published On 2017-10-17 09:38 GMT   |   Update On 2017-10-17 09:38 GMT
அமெரிக்க அதிபர் பதவிக்கு வரும் 2020-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மீண்டும் போட்டியிட தயாரா? என்று தன்னிடம் தோற்ற ஹிலாரி கிளிண்டனுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
வாஷிங்டன்:

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான கருத்துக்களே பரவி வந்த நிலையில் பல்வேறு கருத்துக்கணிப்புகளை முறியடித்து குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

எனினும், குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் 48.5 சதவிகித வாக்குகள் பெற்று 276 இடங்களிலும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் 47.2 சதவிகித வாக்குகள் பெற்று 218 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் தோற்றதற்கு அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ., இயக்குனர் ஜேம்ஸ் கோமேவின் நடவடிக்கைதான்  காரணம் என ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்டு மிகச்சிறிய வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்த ஹிலாரி கிளிண்டன் குற்றம்சாட்டினார்.

இதுதவிர, தனது தோல்விக்கான பல்வேறு காரணங்களையும் ஹிலாரி அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இந்த காரணங்களை எல்லாம் ஒப்புக்கொள்ளாமல் மறுத்து வரும் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹிலாரி ஒரு பலவீனமான வேட்பாளர் என்பதுதான் அவரது தோல்விக்கு காரணம் என்று கூறி வருகிறார்.

இந்நிலையில், வாஷிங்டன் நகரில் உள்ள அதிபரின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டொனால்ட் டிரம்ப், ஹிலாரியின் தோல்விக்கு பல காரணங்கள் இருந்ததாக குறிப்பிட்டார். குறிப்பாக, அவரது செயல்பாடுகள் சிறப்பாக இல்லாததும் ஒரு காரணமாகும்.

2020-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் ஹிலாரி போட்டியிடுவார் என்று நம்புகிறேன். தயவு செய்து இன்னொரு முறை போட்டியிடுங்கள். தயாராகுங்கள் என்று சவால் விடும் பாணியில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News