செய்திகள் (Tamil News)

சோமாலியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு

Published On 2017-10-15 10:06 GMT   |   Update On 2017-10-15 13:29 GMT
சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஓட்டலை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய லாரி குண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 189 ஆக அதிகரித்துள்ளது.
மொகடிஷு:

சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு தீவிரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக உள்ளது.

உள்நாட்டு ராணுவ வீரர்கள் மீது அவ்வப்போது அதிரடியாக தாக்குதல் நடத்திவரும் இந்த தீவிரவாதிகள் மத்திய ஆப்பிரிக்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் பன்னாட்டு அமைதிப் படையினரையும் கொன்று குவிக்கின்றனர். மேலும், வெளிநாட்டினர் வந்து செல்லும் உணவகங்களை குறிவைத்தும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு நகரின் அருகே ஹோடான் மாவட்டத்தில் உள்ள ஒரு சபாரி ஓட்டலை குறிவைத்து நேற்று தீவிரவாதிகள் நடத்திய லாரி குண்டு தாக்குதலில் 20-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர் என முதல்கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை இன்று 189 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சுமார் 60 பேரில் பலரது நிலைமை கவலக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மொகடிஷு நகரில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் என்ற வகையில் இந்த சம்பவத்துக்கு மூன்று நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்குமாறு உத்தரவிட்ட சோமாலியா அதிபர் முஹம்மது அப்துல்லாஹி முஹம்மது சிகிச்சை பெறுபவர்களுக்கு ரத்ததானம் அளிக்க முன்வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

Similar News