செய்திகள்

துபாயில் வேலைபார்த்த தமிழக வாலிபர் கொலையில் பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது

Published On 2017-08-10 04:22 GMT   |   Update On 2017-08-10 04:22 GMT
துபாயில் வேலைபார்த்த தமிழக வாலிபர் கொலை தொடர்பாக பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாய்:

நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள தேரழந்தூரை சேர்ந்தவர் அஜ்ஹர் அகமது (வயது 28). இவர் துபாய் ஜெபல் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக அந்த நிறுவனத்துக்கு சொந்தமான தொழிலாளர் முகாமில் பொறுப்பாளராக இருந்தார்.

இவரது தந்தை அன்வர் அலி, துபாய் அருகே உள்ள ராசல் கைமாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 6-ந் தேதி மாலை அஜ்ஹர் அகமது வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பாகிஸ்தானை சேர்ந்த 35 வயது வாலிபர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து நிறுவன அதிகாரிகள் உத்தரவுப்படி, பாகிஸ்தான் ஊழியரின் பணிநீக்க ஆணையை அவரிடம் அஜ்ஹர் அகமது வழங்கினார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் வாலிபர் திடீரென்று அஜ்ஹர் அகமதுவை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் அஜ்ஹர் அகமது சம்பவ இடத்திலேயே பலியானார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். துபாய் போலீசார் அஜ்ஹர் அகமது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் அஜ்ஹர் அகமதுவை கொலை செய்த பாகிஸ்தான் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜ்ஹர் அகமதுவுக்கு டிசம்பர் மாதம் 17-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டது, அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜ்ஹர் அகமதுவின் உடலை விரைவாக சொந்த ஊருக்கு அனுப்பிவைக்குமாறு அவரது பெற்றோர் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News