செய்திகள் (Tamil News)

”வெல்கம் டூ நரகம்” உலக தலைவர்களை வரவேற்ற ஜி-20 எதிர்ப்பு போராட்டக்காரர்கள்

Published On 2017-07-07 01:25 GMT   |   Update On 2017-07-07 01:25 GMT
ஜெர்மனியில் இன்று தொடங்கும் ஜி-20 மாநாட்டுக்கு வரும் உலக தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து “வெல்கம் டூ நரகம்” என்ற பதாகைகளை பிடித்து லட்சக்கணக்கானோர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
பெர்லின்:

ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உள்பட பலநாட்டு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

உலக தலைவர்கள் ஒன்று கூடுவதால் ஹம்பர்க் நகரம் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலாளித்துவ கொள்கை எதிர்ப்பாளர்கள் லட்சக்கணக்கானோர் கருப்பு உடையணிந்து ஹம்பர்க் நகரில் ஒன்று கூடினர். “வெல்கம் டூ நரகம்” என்ற பதாகைகளை பிடித்து அனைத்து தலைவர்களுக்கும்
தங்களது எதிர்ப்பை போராட்டக்காரர்கள் பதிவு செய்தனர்.



இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் போராட்டக்காரர்களை கலைந்து செல்லும் படி எச்சரித்தனர். ஆனால், போராட்டக்காரர்கள் அசைந்து கொடுக்காததால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது, போலீசார் மீது தண்ணீர் பாட்டில்கள் மற்றும் செங்கற்கள் வீசப்பட்டன.



பின்னர், கண்ணீர் புகை குண்டுகள் வீசி ஒரு வழியாக போராட்டத்தை கலவர தடுப்பு போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறைவான நபர்களே போராட்டம் நடத்தினர் என அரசு சமாளித்தாலும், சுமார் 1 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags:    

Similar News