செய்திகள்

சவுதி அரேபியா கடற்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்மப் படகு பிடிபட்டது

Published On 2017-06-19 13:15 GMT   |   Update On 2017-06-19 13:15 GMT
சவுதி அரேபியா நாட்டுக்கு உட்பட்ட கடற்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்மப் படகை அந்நாட்டு கடற்படையினர் விரட்டிச் சென்று சிறைபிடித்தனர்.
ரியாத்:

சவுதி அரேபியா நாட்டுக்கு உட்பட்ட மர்ஜன் எண்ணைக் கிணற்றின் அருகாமையில் உள்ள கடற்பகுதியில் அந்நாட்டு கடற்படையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் கொடிகளுடன் மூன்று மர்மப் படகுகள் தங்கள் நாட்டு கடற்பகுதியை கடந்து செல்வதை அவர்கள் கவனித்தனர். இதையடுத்து, கடற்படை வீரர்கள் தங்களது அதிவேக படகுகள் மூலமாக துப்பாக்கிகளால் சுட்டவாறு அந்த மர்மப் படகுகளை விரட்டிச் சென்றனர்.

அவற்றில் ஒரு படகு மட்டும் கடற்படையினரிடம் சிக்கியது. இரண்டு படகுகள் அவர்களிடம் பிடிபடாமல் தப்பிச் சென்று விட்டன. சிக்கிய ஒரு படகில் பயங்கரமான போர் ஆயுதங்கள் ஏராளமாக இருந்ததாக சவுதி அரேபியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், பிடிபட்ட படகு எந்த நாட்டைச் சேர்ந்தது? அந்த ஆயுதங்கள் எந்த நாட்டில் இருந்து எங்கு கொண்டு செல்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டன? என்பது தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

அதேவேளையில், தங்கள் நாட்டை சேர்ந்த ஒரு மீன்பிடி படகு காற்றின் போக்கால் திசைமாறி சவுதி அரேபியா நாட்டு கடல் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்து விட்டதாகவும் அந்தப் படகின்மீது சவுதி அரேபியா கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு மீனவர் உயிரிழ்ந்ததாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
Tags:    

Similar News