செய்திகள்

உளவு பார்த்ததாக வழக்கு: சீனாவில் அமெரிக்க பெண் தொழில் அதிபருக்கு 3½ ஆண்டு சிறை

Published On 2017-04-26 23:00 GMT   |   Update On 2017-04-26 23:00 GMT
உளவு பார்த்ததாக அமெரிக்க பெண் தொழில் அதிபருக்கு சீன கோர்ட்டு 3½ ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
பீஜிங்:

அமெரிக்காவை சேர்ந்தவர் பான் கில்லிஸ். பெண் தொழில் அதிபராக விளங்கிய இவர், சாண்டி என்ற செல்லப்பெயரால் அறியப்படுகிறார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது தொழில் விஷயமாக சீனா சென்றிருந்தார். ஆனால் அவர் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி சீன போலீஸ் கைது செய்தது.

2 ஆண்டுகள் அவர் சிறைவாசம் அனுபவித்து வந்தார். இது ஐ.நா. சபை மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கண்டனங்களுக்கு வழி வகுத்தது.

அவர் 20 ஆண்டுகள் சீனாவில் உளவு வேலையில் ஈடுபட்டதாகவும், புதிய உளவாளிகளை நியமனம் செய்ய முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது கேலிக்கூத்தானது என்று அவரது கணவர் ஜெப் கில்லிஸ் கருத்து தெரிவித்தார்.

இருப்பினும் பான் கில்லிஸ் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்தது.

முடிவில், நேற்று முன்தினம் சீன கோர்ட்டு அவருக்கு 3½ ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது.

பான் கில்லிஸ், அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சீனாவில் இருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.

Similar News