செய்திகள்

அல்கொய்தா தீவிரவாத தலைவர் பாகிஸ்தானில் பதுங்கல்: உளவுத்துறை பாதுகாப்பதாக புகார்

Published On 2017-04-23 07:28 GMT   |   Update On 2017-04-23 07:28 GMT
அல்கொய்தா தீவிரவாத தலைவர் அய்மான் அல்-ஜவாகிரியை பாகிஸ்தான் உளவுத்துறை பாதுகாத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாஷிங்டன்:

அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் பதுங்கியிருந்த போது கடந்த 2011-ம் ஆண்டு மே 2-ந்தேதி அமெரிக்க அதிரடிப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதன் பின்னர் அல்கொய்தா இயக்க தலைவராக அய்மான் அல்-ஜவாகிரி பொறுப்பு ஏற்றார். எகிப்தை சேர்ந்த இவர் டாக்டர் ஆவார். பின்லேடனுக்கு மிகவும் உண்மையானவர். நெருக்கமாக இருந்தார்.

தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். கடந்த ஆண்டு (2016) பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் இவர் பதுங்கியிருப்பதாக அமெரிக்காவுக்கு தகவல் கிடைத்தது. எனவே அங்கு ஆளில்லா விமானம் மூலம் குண்டு வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

ஆனால் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். அவர் தங்கியிருந்த காம்பவுண்டு சுவர் மட்டும் சேதம் அடைந்தது. இந்த நிலையில் தற்போது அவர் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலை அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ.வின் 30 ஆண்டு அனுபவம்மிக்க மூத்த அதிகாரி புரூஸ் ரிடல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ‘நியூஸ் வீக்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இதை கூறியுள்ளார். ஜவளி பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் தங்கியுள்ளார். அபோதாபாத்தில் பின்லேடன் தாக்கி கொல்லப்பட்ட போது அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணம் மூலம் இது தெரிய வந்தது.

இவர் பாகிஸ்தானின் ‘ஐ.எஸ்.ஐ.’ உளவுத்துறையின் பலத்த பாதுகாப்பில் இருக்கிறார். கராச்சி ஒரு பெரிய நகரம். அங்கு 26 லட்சம் பேர் தங்கியுள்ளனர். எனவே அபோதாபாத் போன்று அங்கு அமெரிக்க அதிரடி படையால் தாக்குதல் நடத்த முடியாது.

எனவே, ஜவாகிரியை பிடிப்பது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News