செய்திகள்

ஜாதவுக்கு தூதரக உதவி: தகுதி அடிப்படையில் முடிவு செய்வதாக பாகிஸ்தான் சொல்கிறது

Published On 2017-04-21 16:55 GMT   |   Update On 2017-04-21 16:55 GMT
பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி ஜாதவுக்கு தூதரக உதவி வழங்கும் விஷயத்தில் தகுதி அடிப்படையில் முடிவுசெய்யப்படும் என பாகிஸ்தான் கூறியுள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ஜாதவுக்கு தூதரக உதவிகளை வழங்க அனுமதிக்கும்படி இந்தியா தரப்பில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பாகிஸ்தான் ஏற்கவில்லை.

பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கவுதம் பம்பாவாலே, பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் டெமினா ஜன்ஜூவாவை சந்தித்து பேசினார். அப்போதும், குல்பூ‌ஷண் ஜாதவுக்கு தூதரக உதவி அளிக்க அனுமதி கோரினார். மேலும் ஜாதவ் மீதான குற்றப்பத்திரிகை நகல் மற்றும் மரணதண்டனை தீர்ப்பின் நகலையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஜாதவுக்கு தூதரக உதவி அளிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 13 தடவை கோரிக்கை விடுத்தும் பாகிஸ்தான் அதை ஏற்கவில்லை. இருந்தாலும் தற்போதும் அவருக்கு தூதர உதவி அளிக்க வெளியுறவு செயலாளரிடம் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமும் மேல்முறையீடு செய்ய முடியும்” என்றார்.

இந்நிலையில், ஜாதவுக்கு தூதரக உதவிகள் தொடர்பான இந்தியாவின் கோரிக்கை குறித்து, தகுதி அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நபீஸ் ஜகாரியா கூறும்போது, ‘தூதரக உதவி தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இடையே உடன்பாடு இருக்கிறது. ஆனால், அனைத்து வழக்குகளிலும், தகுதி அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும். ஜாதவுக்கு தூதரக உதவிகள் வழங்குவது தொடர்பாக பாகிஸ்தான் துணை தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது. இதில் புதிதாக ஒன்றும் இல்லை. இது, ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதால் மேற்கொள்ளப்பட்ட எதிர்வினை நடவடிக்கை’ என்றார்.

Similar News