செய்திகள்

ராஜபக்சே குடும்பத்தினரை காப்பாற்ற மாட்டோம்: அதிபர் சிறிசேனா உறுதி

Published On 2017-03-30 05:43 GMT   |   Update On 2017-03-30 05:43 GMT
கொலை குற்றச்சாட்டு கூறப்பட்டுளள் ராஜபக்சே குடும்பத்தினர் குற்றம் செய்து இருந்தால் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும். அவர்களை ஒரு போதும் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்ய மாட்டேன் என அதிபர் சிறிசேனா கூறியுள்ளார்.
கொழும்பு:

இலங்கையில் 2009-ம் ஆண்டு பத்திரிகை ஆசிரியர் விக்கிரம சிங்கே கொலை செய்யப்பட்டார். இதில், முன்னாள் அதிபர் ராஜபக்சே குடும்பத்தினருக்கு சம்பந்தம் இருப்பதாக கூறப்பட்டது.

ராஜபக்சே ஆட்சியில் மட்டும் 17 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். அதில், பல கொலைகளில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக புகார்கள் வந்தன.

2015-ம் ஆண்டு ரக்பீ விளையாட்டு வீரர் வாசிம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையில் ராஜபக்சேவின் 2 மகன்கள் நமல் ராஜபக்சே, யோசிதா ஆகியோர் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ராஜபக்சேவின் சொந்த மாவட்டமான குர்னே கலாவில் ராணுவ நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இதில், அதிபர் மைத்ரி பால சிறிசேனா கலந்து கொண்டார். அவர், கொலை வழக்குகளில் ராஜபக்சே குடும்பத்தினர் சம்பந்தப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி பேசினார். அவர் கூறியதாவது:-

இலங்கை போரின் போது, ராணுவ வீரர்களின் செயல்கள் அனைத்துக்கும் நான் முழு பொறுப்பு ஏற்று கொள்கிறேன். அவர்கள் நாட்டை பாதுகாப்பதற்காக தங்கள் கடமைகளை செய்தார்கள்.

ஆனால், சிலர் (ராஜபக்சே குடும்பத்தினர்) நாட்டின் பாதுகாப்பு சம்பந்தம் அல்லாமல் கொலை குற்றங்களை செய்து இருக்கிறார்கள்.

அந்த குடும்பத்தினர் குற்றம் செய்து இருந்தால் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும். அவர்களை ஒரு போதும் காப்பாற்றுவதற்கு நான் முயற்சி செய்ய மாட்டேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

ராஜபக்சே குடும்பத்தினரை குறிப்பிட்டு மைத்ரி பால சிறிசேனா இவ்வாறு பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News