செய்திகள்

ஆஸ்திரேலியாவில் இந்தியர் மீது இனவெறி தாக்குதல்

Published On 2017-03-26 21:32 GMT   |   Update On 2017-03-26 21:32 GMT
ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் டிரைவராக வேலை பார்த்து வரும் கேரள மாநிலத்தை சேர்ந்த இந்தியர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மெல்போர்ன்:

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் புத்தபள்ளியை சேர்ந்தவர் லி மேக்ஸ் ஜாய் (வயது 33). இவர், ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

அண்மையில், அங்குள்ள ஒரு உணவகத்தில் காபி குடிக்க ஜாய் சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு பெண் உள்ளிட்ட 5 ஆஸ்திரேலிய இளைஞர்கள் அவரிடம், நீ இந்தியனா? என்று கேட்டவாறே சரமாரியாக தாக்கினர். உணவக நிர்வாகிகள் போலீசுக்கு போன் செய்ய முயன்றதால் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர். ஆனால் உணவகத்தினர் போன் செய்யாததை தெரிந்துகொண்டு சிறிதுநேரம் கழித்து அங்கே வந்த அவர்கள் ஜாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மீண்டும் அவரை கடுமையாக தாக்கினர். இதில் பலத்த ரத்தகாயம் அடைந்த ஜாய் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஜாய் தன் மீது நடத்தப்பட்ட இனவெறி தாக்குதல் குறித்து ஹோபர்ட் நகர போலீசில் புகார் செய்தார். இந்த பிரச்சினையில் இந்திய வெளியுறவுத்துறை தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஜாய், தாக்கப்பட்டதற்கு கோட்டயம் பாராளுமன்ற தொகுதி எம்.பி. ஜோஸ் கே.மணி கடும் கண்டனம் தெரிவித்தார். இதுபற்றி டெல்லியில் வெளியுறவு அமைச்சகத்தில் முறையிடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார். 

Similar News