செய்திகள்

பாகிஸ்தானில் ராணுவ நீதிமன்றங்களை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் மசோதா நிறைவேறியது

Published On 2017-03-21 16:19 GMT   |   Update On 2017-03-21 16:19 GMT
பாகிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ நீதிமன்றங்களை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வகை செய்யும் மசோதா தேசிய சபையில் நிறைவேறியது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் 2014ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து தீவிரவாத வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காக  2015ம் ஆண்டு ராணுவ நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த நீதிமன்றங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

இந்த நீதிமன்றங்கள் இதுவரை 161 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது. அதில், 21 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.


இந்த நீதிமன்றங்களின் செயல்பாட்டுக் காலம் ஜனவரி மாதம் முடிவடைந்துவிட்டது. மேலும், பல தீவிரவாதிகளுக்கு தண்டனை வழங்கும் வகையில் ராணுவ நீதிமன்றங்களை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என ராணுவம் வலியுறுத்தி வந்தது. எனவே, பாகிஸ்தானில் அடுத்தடுத்து நடந்த தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தலான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ராணுவ நீதிமன்றங்களின் ஆயுட்காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அரசு முடிவு செய்தது.

இதற்கான அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா, பாகிஸ்தான் தேசிய சபையில் தாக்கல் செய்யப்பட்டு இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 342 உறுப்பினர்களில் 255 உறுப்பினர்கள் மசோதாவை ஆதரித்து வாக்களித்தனர். 4 பேர் எதிர்த்து வாக்களித்தனர். இதேபோல், ராணுவ நீதிமன்றங்கள் அமைப்பதற்காக பாகிஸ்தான் ராணுவ சட்டத்திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து இந்த மசோதா மேல் சபையான செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். இரண்டு சபைகளிலும் சட்ட மசோதா நிறைவேறியதும், அதனை சட்டமாக்கி அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி மம்னூன் உசைனிடம் ஒப்புதல் கையெழுத்து பெற வேண்டும்.

Similar News