செய்திகள்

கானா நாட்டில் அருவியில் குளித்த 20 மாணவர்கள் பலி

Published On 2017-03-21 00:48 GMT   |   Update On 2017-03-21 00:48 GMT
கானா நாட்டில் அருவியில் குளித்த 20 மாணவர்கள் பலத்த காயம் அடைந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 25-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளும், மாணவர்களும் படுகாயம் அடைந்தனர்.
அக்கிரா:

ஆப்பிரிக்க நாடான கானாவில் பிராங் அகாபோ பகுதியில் கின்டாம்போ என்னும் பிரபல அருவி உள்ளது. நேற்று முன்தினம் வார விடுமுறை என்பதால் இந்த அருவியில் குளிப்பதற்காக அப்பகுதியில் உள்ள வென்சி சீனியர் என்ற பள்ளியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு வந்தனர். அவர்கள் சுற்றுலா பயணிகளுடன் அருவியின் கீழ் பகுதியில் உற்சாகமாக நீந்திக் குளித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென பலத்த மழையுடன் பயங்கர சூறாவளிக்காற்று வீசியது. இதில் ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்து அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது. இதில் 20 மாணவர்கள் பலத்த காயம் அடைந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 25-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளும், மாணவர்களும் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த போலீசாரும், மீட்பு குழுவினரும், காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சுற்றுலா சென்ற இடத்தில் மாணவர்கள் பலியான சம்பவம் கானாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Similar News