செய்திகள்

பாகிஸ்தான் தின ராணுவ அணிவகுப்பில் சீனா, துருக்கி வீரர்கள் பங்கேற்பு

Published On 2017-03-13 09:38 GMT   |   Update On 2017-03-13 14:45 GMT
பாகிஸ்தான் நாடு உருவானதை குறிக்கும் பாகிஸ்தான் தின ராணுவ அணிவகுப்பில் முதன் முறையாக சீனா மற்றும் துருக்கி ராணுவத் துருப்புகள் இம்முறை பங்கேற்க இருக்கின்றன.
இஸ்லாமாபாத்:

கடந்த 1940-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் என்ற தனி நாடு அமைக்கவேண்டும் என முஸ்லீம் லீக் கட்சிக் கூட்டத்தில் முதன் முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையொட்டி வருடம் தோறும் இதே நாள் ‘பாகிஸ்தான் தினம்” என்ற பெயரில் அந்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் நாட்டு முப்படை வீரர்களின் அணிவகுப்பு சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டில் முதன் முறையாக பாகிஸ்தான் ராணுவ அணிவகுப்பில் வெளிநாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர். சீன ராணுவ வீரர்கள் மற்றும் துருக்கி ராணுவ இசைக்குழுவினர் இந்த அணிவகுப்பில் நட்புறவு  அடிப்படையில் பங்கேற்க இருப்பதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசிப் கஃபோர் தெரிவித்துள்ளார்.



தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக 7 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ராணுவ அணிவகுப்பு கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News