செய்திகள்

அமெரிக்கா வருவதற்கு தடைவிதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருந்து ஈராக் நீக்கம்

Published On 2017-03-02 02:18 GMT   |   Update On 2017-03-02 03:34 GMT
விசா பெறுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நாடுகளின் பட்டியலில் இருந்து ஈராக்கை நீக்க டிரம்ப் முடிவு செய்து உள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றுக்கொண்ட பின் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். அந்தவகையில் ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், அவர்கள் அமெரிக்கா வர தடைவிதிப்பதாகவும் அவர் பிறப்பித்த உத்தரவு உலகஅளவில் பெரும் கண்டனங்களுக்கு வழிவகுத்தன.

அதே வேளையில் இந்த உத்தரவுக்கு எதிராக அமெரிக்காவில் பெருமளவில் போராட்டங்கள் வெடித்தன. கோர்ட்டுகளில் வழக்குகளும் தொடரப்பட்டன. அப்படி ஒரு வழக்கை விசாரித்த சியாட்டில் மத்திய கோர்ட்டு நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட், டிரம்பின் உத்தரவுக்கு அமெரிக்கா முழுவதும் தற்காலிக தடை விதித்து தீர்ப்பு அளித்தார்.


இந்த தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் அப்பீல் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு டிரம்ப் தடை உத்தரவு தொடர்பாக சியாட்டில் மத்திய கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு தடைவிதிக்க முடியாது என கூறி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து டிரம்ப் மறு உத்தரவு பிறப்பிப்பார் அல்லது அதில் மாற்றங்களை கொண்டுவருவார் என எதிர்பார்க்கப்பட்டது.


இந்த நிலையில், ஈராக்கை தடைப்பட்டியலில் சேர்த்ததற்கு ராணுவ தலைமையகமான பென்டகன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆட்சேபனை தெரிவித்தன. மேலும் அவை இது குறித்து மறுபரிசீலனை செய்யும்படி டிரம்ப் நிர்வாகத்தை வலியுறுத்தி வந்ததை தொடர்ந்து டிரம்ப் இந்த முடிவை எடுத்து உள்ளார்.

Similar News