செய்திகள்

காபூல் நகரில் திடீர் தாக்குதல்: தலிபான் தீவிரவாதிகள் - பாதுகாப்பு படையினர் கடும் துப்பாக்கி சண்டை

Published On 2017-03-01 11:04 GMT   |   Update On 2017-03-01 11:04 GMT
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காவல்துறை தலைமை அலுவலகம் மற்றும் ராணுவ மையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் காவல்துறை, ராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்புகளை குறிவைத்து தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று, தலிபான்கள் ஆதிக்கம் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 24 போலீஸ்காரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த பரபரப்பும் பதற்றமும் அடங்குவதற்குள் இன்று காபூலில் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தி நிலைகுலையச் செய்துள்ளனர். புறநகர்ப் பகுதியில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகம், ராணுவ ஆட்சேர்ப்பு மையத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், பின்னர் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.


இந்த தாக்குதல் மற்றும் துப்பாக்கி சண்டையில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் காயம் குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை. எனினும் பலர் பலியாகியிருக்கலாம் என தெரிகிறது. 35 பேர் காயமடைந்திருப்பதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News