செய்திகள்

இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை பிராந்திய ஒத்துழைப்பை சீர்குலைக்கிறது - முஷாரப்

Published On 2017-02-27 12:34 GMT   |   Update On 2017-02-27 12:34 GMT
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் இடையே உள்ள பிரச்சனைகளால் ஒட்டுமொத்த தெற்காசிய பிராந்தியத்தின் ஒத்துழைப்பு சீர்குலைவதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் கூறியுள்ளார்.
துபாய்:

வளரும் தெற்காசியா என்ற பெயரில் மாநாடு துபாயில் நடந்து வருகிறது. தெற்காசியாவில் உள்ள நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் இம்மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் பிராந்திய ஒத்துழைப்புக்கு தடைகளாக உள்ளன. இதனால், சார்க் கூட்டமைப்பின் மாநாடுகளில் கூட அரசியல் புகுந்துள்ளது. எனவே, இம்மாதிரியான மாநாடுகள் பயனற்றவை என நிரூபிக்கும்.

ஒவ்வொரு நாடுகளும் தனித் தனியே செயல்பட்டு வருகின்றன. ஆனால், தெற்காசிய நாடுகளின் ஒட்டு மொத்த செயல்பாடு என பார்த்தால், சிறப்பானது என எதையும் எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை இடையூறாக உள்ளது. தெற்காசியாவை பொறுத்தவரை மனிதவளம், இயற்கை வளம் என அனைத்து சாதகமான அம்சங்களையும் கொண்டுள்ளது.

இவ்வாறு பேசினார்.

மேலும், தனது பேச்சில் ஆப்கானிஸ்தான் நாடு பிராந்திய வளர்ச்சியை தடுக்கிறது என குற்றம் சாட்டினார். வளரும் தெற்காசியா என்ற மாநாடு மூன்றாவது முறையாக துபாயில் நடக்கிறது. இதற்கு முன்னதாக, 2006 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் கொழும்பு நகரில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News