செய்திகள்

இந்தியா - இஸ்ரேல் இடையே ரூ.17 ஆயிரம் கோடியில் ஏவுகணை ஒப்பந்தம்

Published On 2017-02-24 19:39 GMT   |   Update On 2017-02-24 19:39 GMT
இந்தியா - இஸ்ரேல் நாடுகளுக்கிடையே ரூ.17 ஆயிரம் கோடியில் ஏவுகணை ஒப்பந்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியா-இஸ்ரேல் இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு இந்த ஆண்டுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. அந்த நாட்டிடம் இருந்து ராணுவ தளவாடங்களை அதிகமாக கொள்முதல் செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு இறுதியில் இஸ்ரேல் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாக இரு நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய ஏவுகணை ஒப்பந்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.



ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் படி இந்திய ராணுவத்துக்கு தரையில் இருந்து வான் இலக்கை தாக்கவல்ல நடுத்தர ரக ஏவுகணைகள், கடற்படைக்கு நீண்டதூர ஏவுகணைகள் தயாரிக்கப்படும். மொத்தம் 200 ஏவுகணைகள் மற்றும் 40 தாக்குதல் அலகுகள் தயாரிக்க ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் (டி.ஆர்.டி.ஓ.), இஸ்ரேலின் விமான நிறுவனமும் (ஐ.ஏ.ஐ) இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த பாதுகாப்புக்கான மந்திரிசபை இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது.

Similar News