செய்திகள்

ஜெருசலேம் லாரி தாக்குதலை நடத்தியவர் ஒரு ஐ.எஸ் ஆதரவாளர்: இஸ்ரேல் பிரதமர்

Published On 2017-01-08 23:59 GMT   |   Update On 2017-01-08 23:59 GMT
ஜெருசலேம் லாரி தாக்குதலை நடத்தியவர் ஒரு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஜெருசலேம்:

இஸ்ரேல் நாட்டின் தலைநகரான ஜெருசலேத்தில் ராணுவப்படையைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் பஸ்சில் ஏறுவதற்கு தயாராக இருந்த போது திடீரென அவர்களுக்கு மத்தியில் லாரி ஒன்று புகுந்தது.

இதில் 3 பெண் வீரர்கள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் 20 வயது மிக்கவர்கள். மேலும் இந்த தாக்குதலில் 14 பேர் காயம் அடைந்தனர்.

அப்போது ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்திய அந்த லாரியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் லாரி டிரைவர் உயிரிழந்தார். அவர் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெருசலேம் லாரி தாக்குதலை நடத்தியவர் ஒரு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தாக்குதல் நடந்த இடத்தை பாதுகாப்பு துறை மந்திரி அவிக்டோர் லிபெர்மேனுடன் பிரதமர் நெதன்யாகு பார்வையிட்டார்.

இதனையடுத்து அவரது அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், குற்றவாளி ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர் என்பதற்கான அறிகுறிகளே தெரிகிறது” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Similar News