செய்திகள்

மற்ற பேட்டரிகளை விட இரு மடங்கு பேக்கப் வழங்கும் பேட்டரி கண்டுபிடிப்பு

Published On 2016-12-04 15:42 GMT   |   Update On 2016-12-04 15:42 GMT
ஹூவாய் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், இன்று பயன்படுத்தப்படும் சாதாரண வகை பேட்டரிகளை விட இரு மடங்கு அதிக நேரத்திற்கு பேக்கப் வழங்கும் பேட்டரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்சென்:

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சனையாக இருப்பது அதன் பேட்டரி பேக்கப் தான் எனலாம். எத்தனை பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனாக இருந்தாலும் பேட்டரி பேக்கப் ஒரு நாள் மட்டுமே நீடிக்கிறது. இந்த பிரச்சனையை தற்காலிகமாக தீர்க்க பவர் பேங்க்கள் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் புதிய வகை பேட்டரியை கண்டுபிடித்துள்ளது. அதன்படி லி-அயன் பேட்டரிகளில் கிராபெனின் செலுத்தி பல்வேறு சோதனைகளை செய்தது. இதில் கிராபெனின் செலுத்தப்பட்ட லி-அயன் பேட்டரிகள் நீண்ட நேரம் பேக்கப் வழங்கியதாக ஹூவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று பெரும்பான்மையான ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் லி-அயன் பேட்டரிகளை விட ஹூவாய் நிறுவனம் கண்டுபிடித்திருக்கும் பேட்டரிகள் இருமடங்கு அதிக பேட்டரி பேக்கப் வழங்கும் என ஆய்வின் மூலம் தெரியவந்திருக்கிறது. இதன் காரணமாக குறைந்த பேட்டரி பேக்கப் வழங்கிய கழற்ற முடியாத பேட்டரிகள் கொண்ட போன்கள் வழக்கொழிந்து போகலாம் என்றும் கூறப்படுகிறது.

கிராபெனின் செலுத்தப்பட்ட லி-அயன் பேட்டரிகள் மற்ற லி-அயன் பேட்டரிகளை விட அதிக வெப்பத்தை தாங்கும் என்பதால் இவை ஸ்மார்ட்போன்கள் அல்லாமல் எலெக்ட்ரிக் கார், டிரோன் என பல்வேறு இதர பயன்பாடுகளுக்கும் உபயோகிக்க முடியும் என ஹூவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Similar News