செய்திகள்

ஈரான் ரெயில் விபத்தில் பலி 31 ஆக உயர்வு: கவர்னர் தகவல்

Published On 2016-11-25 14:05 GMT   |   Update On 2016-11-25 14:05 GMT
ஈரானில் இன்று ரெயில்கள் மோதிய விபத்தில் உயிரிழப்பு 31 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெஹ்ரான்:

ஈரான் நாட்டின் செம்னான் மாகாணம் ஹாப்ட்-கான் ரெயில் நிலையம் வழியாக சென்ற இரண்டு ரெயில்கள் உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.50 மணியளவில் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், மோதிய வேகத்தில் இரு ரெயில்களின் எஞ்சின் பெட்டிகள் மற்றும் சில பயணிகள் பெட்டிகள் தடம்புரண்டு தீப்பிடித்து எரிந்தன.

இந்த கோர விபத்தில் பதினைந்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மேலும், ஏராளமானோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் சிலர் உயிரிழந்ததைடுத்து பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

31 பேர் பலியானதை மாகாண கவர்னர் முகமது ரேசா கப்பாஸ் உறுதி செய்தார். மேலும், 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் கூறினார்.

முதலில் இவ்விபத்து ஹாப்ட்-கான் ரெயில் நிலையத்தில் நடந்ததாக செய்தி வெளியானது. ஆனால் ரெயில் நிலையத்தில்  விபத்து நடக்கவில்லை என்றும், அங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் முன்னால் சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மீது பயணிகள் ரெயில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் கவர்னர் விளக்கம் அளித்தார்.

Similar News