செய்திகள்

ரொட்டி செய்து கொடுக்காத மகளை கொன்ற தந்தைக்கு மரண தண்டனை

Published On 2016-10-25 16:23 GMT   |   Update On 2016-10-25 16:23 GMT
பாகிஸ்தானில் விரும்பியபடி ரொட்டி செய்து சாப்பிடக் கொடுக்காத மகளை கொலை செய்த தந்தைக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
லாகூர்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சாத்பாக் காவல் சரகத்தைச் சேர்ந்தவர் காலித் மெஹ்மூத். இவர் சாப்பாடு வாங்குவதற்காக வெளியில் சென்ற தனது 12 வயது மகளைக் காணவில்லை என்று கடந்த ஆண்டு காவல்துறையில் புகார் அளித்தார். மகள்  கடத்தி செல்லப்பட்டிருக்கலாம் என்றும் புகாரில் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அந்த சிறுமி அருகில் உள்ள மருத்துவமனைக்கு வெளியில் பிணமாக மீட்கப்பட்டாள்.

பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையின்போது அந்த சிறுமியை அவரது தந்தையே கொன்று நாடகம் ஆடியது தெரியவந்தது. அதுவும் தான் கேட்டபடி சாப்பிட ரொட்டி செய்து கொடுக்காததால் அடித்துக் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து சிறுமியின் தந்தை மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது லாகூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில், காலித் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். சிறிய பிரச்சினைக்காக மகள் என்றும் பாராமல் கொடூரமாக கொன்ற இதுபோன்ற நபர்களுக்கு மன்னிப்பு வழங்க முடியாது என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News