செய்திகள்

எங்கள் நாட்டிற்கு எதிராக தண்ணீர் விவகாரத்தை ஆயுதமாக பயன்படுத்த இந்தியா விரும்புகிறது: பாகிஸ்தான் குற்றச்சாட்டு

Published On 2016-10-18 20:07 GMT   |   Update On 2016-10-18 20:07 GMT
தங்கள் நாட்டிற்கு எதிராக தண்ணீர் விவகாரத்தை ஆயுதமாக பயன்படுத்த இந்தியா விரும்புகிறது என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
இஸ்லாமாபாத்:

சிந்து நீர் ஒப்பந்தம் (Indus Waters Treaty) சிந்து ஆற்று நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்து கொள்வதற்காக செப்டம்பர் 19, 1960ல் ஏற்பட்டதாகும். அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவும் பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் இதில் கையெழுத்திட்டார்கள். உலக வங்கி மூன்றாவது சாட்சியாக இதில் கையொப்பமிட்டது.

இந்திய பாகிஸ்தான் எல்லையில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக இருநாடுகளின் உறவில் தற்போது சிக்கல் வலுத்துள்ளது.  

இதனால் சிந்து நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியா தரப்பில் கோரிக்கைகள் எழுந்தன. இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது.

இந்நிலையில், தங்கள் நாட்டிற்கு எதிராக தண்ணீர் விவகாரத்தை ஆயுதமாக பயன்படுத்த இந்தியா விரும்புகிறது என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சிறப்பு உதவியாளர் தரிக் பதெமி கூறுகையில் இது அப்பட்டமான சர்வதேச ஒப்பந்தத்தை மீறும் வகையிலான நடவடிக்கை என்று தெரிவித்தார்.

மேலும், காஷ்மீரில் இந்தியா மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறினார். இந்தியாவின் இத்தகைய போர்வெறி மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மீது சர்வதேச அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.

Similar News