செய்திகள்

72 மணி நேர போர் நிறுத்த உடன்பாட்டிற்கு ஏமன் அதிபர் ஒப்புதல்

Published On 2016-10-17 21:36 GMT   |   Update On 2016-10-17 21:36 GMT
ஏமனில் 72 மணி நேர போர் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கான உடன்பாட்டிற்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஏதென்:

ஏமன் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு தருகிறது. அதே நேரத்தில், ஏமன் அதிபருக்கு ஆதரவாகவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் சவுதி கூட்டுப்படைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சண்டையிட்டு வருகின்றன. இந்த சண்டையில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லபட்டு விட்டனர்.

அங்கு சண்டை நிறுத்தம் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது சர்வதேச அமைப்புகள் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், ஏமனில் 72 மணி நேர போர் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கான உடன்பாட்டிற்கு அதிபர் மன்சூர் ஹைதி ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐ.நா. சபையில் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஏமன் நாட்டிற்கான ஐ.நா. தூதர் இஸ்மாயில் ஒவுல்டு செக் அகமது கூறுகையில், “உடனடியாக போர் நிறுத்த உடன்பாட்டை கொண்டு வர அழைப்பு விடுத்திருக்கிறோம். அடுத்த சில மணி நேரங்களில் அது அறிவிக்கப்படும்” என்றார்.

Similar News