செய்திகள்

அமெரிக்காவில் கறுப்பர் இன மாணவர் சுட்டுக்கொலை - போலீசாருக்கு எதிராக போராட்டம்

Published On 2016-10-03 05:52 GMT   |   Update On 2016-10-03 05:52 GMT
அமெரிக்காவில் கறுப்பர் இன மாணவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் போராட்டம் நடந்தது.
லாஸ் ஏஞ்சல்ஸ்:

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் கார்னெல் ஸ்னெல் (18) மாணவர். நேற்று முன்தினம் இவர் ஒரு காரில் பயணம் செய்தார். அப்போது அந்த கார் திருடப்பட்டதாக கூறி போலீசார் அதை விரட்டி சென்றனர்.

ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் அதிவேகமாக ஓட்டினர். இதற்கிடையே திடீரென காரை நிறுத்திவிட்டு டிரைவர் ஓட்டம் பிடித்தார். அவருடன் சேர்ந்து கார்னெல் ஸ்னெல்லும் தப்பி ஓடினார்.

வீட்டின் அருகே வந்தபோது அவரை போலீசார் துப்பாக்கியால் 4 முறை சுட்டனர். அதில் குண்டு பாய்ந்து அதே இடத்தில் கார்னெல் ஸ்னெல் பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் கார்னெலின் தங்கை டிரென்னல் ஸ்னெல் (17) கண் முன்பு நடந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

தெற்கு கலிபோரினியாவில் கடந்த 5 நாட்களில் 3 கறுப்பர்கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த கறுப்பர் இன மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கு எதிரான கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இனவெறி தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கிடையே கார்னெல் ஸ்னெல் பயணம் செய்தது திருட்டு கார் என்றும், அதில் பேப்பரால் போலி நம்பர் பிளேட் ஒட்டப்பட்டிருந்தது என போலீசார் தெரிவித்தனர். நிற்காமல் அதிவேகமாக ஓட்டப்பட்ட காரை விரட்டிச் சென்று சந்தேகத்தின் பேரில் சுட்டு பிடித்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் கார்னெல்ஸ்னெல் சுடப்பட்ட இடத்தில் கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

Similar News