செய்திகள்

சீன தூதரகம் முன்பு பலூச் விடுதலை ஆர்வலர்கள் தொடர் தர்ணா

Published On 2016-09-26 13:44 GMT   |   Update On 2016-09-26 13:44 GMT
லண்டனில் உள்ள சீனத் தூதரகம் முன்பு, பலூச் விடுதலை ஆர்வலர்கள் தர்ணா போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
லண்டன்:

பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்திற்கு விடுதலை கோரி பலூச் தேசியவாத அமைப்பு போராடி வருகிறது. இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு ஆதரவாக பேசியதையடுத்து இவ்விவகாரம் பெரிய அளவில் பேசப்படுகிறது. போராட்டக்காரர்களும் தங்கள் போராட்டத்தினை தீவிரப்படுத்தி உள்ளனர். வெளிநாடுகளில் உள்ள பலூச் ஆர்வலர்களும் போராடத் தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா - பாகிஸ்தான் இணைந்து செயல்படுத்தி வரும் பொருளாதார பாதை (சி.பி.இ.சி.) திட்டத்திற்கு எதிராக லண்டனில் உள்ள சீன தூதரகத்திற்கு வெளியே பலூச் விடுதலை இயக்கம் சார்பில் இன்று தர்ணா போராட்டம் தொடங்கியது. தினமும் இரண்டு பேர் பதாகையை ஏந்தியபடி தூதரகத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

ஒருவார காலம் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற உள்ள இப்போராட்டம் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்துடன் அக்டோபர் 1-ம் தேதி நிறைவடைகிறது.

சீனா-பாகிஸ்தான் கூட்டு திட்டத்திற்கு எதிராக அமைதியான வழியில் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக பலூசிஸ்தான் விடுதலை இயக்கங்கள் தெரிவித்துள்ளன.

இதுபற்றி பலூசிஸ்தான் விடுதலை இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘பலூசிஸ்தானில் 21-வது நூற்றாண்டின் கிழக்கிந்திய கம்பெனியாக சீனா தற்போது மாறியிருக்கிறது. அவர்களின் விரிவாக்க வடிவமைப்புகள் இந்த பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். இதற்கு அதன் அண்டை நாடான வியட்நாம் முக்கிய உதாரணம். இன்று தென்சீனக் கடல் விவகாரத்தில் சர்வதேச சட்டத்தை மதிக்காத போக்கினை நாம் பார்க்க முடிகிறது’ என கூறியுள்ளது.

Similar News