தமிழ்நாடு

திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு கூடுதல் சிறப்பு பஸ்கள்

Published On 2023-10-27 03:05 GMT   |   Update On 2023-10-27 03:05 GMT
  • சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
  • வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 10,834 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

வருகிற 28, 29-ந்தேதி (சனி, ஞாயிற்றுக்கிழமை) ஆகிய விடுமுறை நாட்களை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் கூடுதலாக 300 சிறப்பு பஸ்களும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பஸ்களும் ஆக மொத்தம் 600 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி 28-ந்தேதி (நாளை) திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமையன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 10,834 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 10,874 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News