தமிழ்நாடு

திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் விருது வழங்கும் விழா

Published On 2024-05-25 04:34 GMT   |   Update On 2024-05-25 04:34 GMT
  • 2022-ம் ஆண்டு முதல் கார்ல்மார்க்ஸ் பெயரில் மார்க்ஸ் மாமணி விருது வழங்கப்படுகிறது.
  • பொதுச் செயலாளர்கள் சிந்தனை செல்வன், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.

இந்த விழாவில் நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு அம்பேத்கர் சுடர் விருது, வழக்கறிஞர் அருள் மொழிக்கு பெரியார் ஒளி விருது, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது, பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு காமராஜர் கதிர் விருது, பேராசிரியர் ராஜ் கவுதமனுக்கு அயோத்தி தாசர் ஆதவன் விருது, முனைவர் எஸ்.என். சிக்கந்தருக்கு காயிதே மில்லத் பிறை விருது சுப்பராயலுக்கு செம்மொழி ஞாயிறு விருது வழங்கப்படுகிறது.

விருது வழங்கும் விழா விற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர்கள் சிந்தனை செல்வன், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

விருது வழங்கும் நிகழ்ச்சி குறித்து தொல்.திருமாவளவன் கூறியதாவது:-

ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக பாடுபட்டு வரும் தலித் அல்லாத சான்றோரை போற்றும் வகையில் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரில் அம்பேத்கர் சுடர் விருது முதன் முதலில் 2007-ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழங்கப்பட்டது.

2008-ம் ஆண்டு முதல் அம்பேத்கர் சுடர் விருதுடன் பெரியார் ஒளி, அயோத்தி தாசர் ஆதவன், காமராஜர் கதிர், காயிதே மில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளும் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து வரும் சான்றோர்களுக்கு பாராட்டு பட்டயம், நினைவு கேடயம், ஆகியவற்றுடன் ரூ.50 ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்பட்டு வருகின்றன.

2022-ம் ஆண்டு முதல் கார்ல்மார்க்ஸ் பெயரில் மார்க்ஸ் மாமணி விருது வழங்கப்படுகிறது.

விளிம்பு நிலை மக்களுக்காக பாடுபடும் தலித் இல்லாத ஜனநாயக சக்திகளை அடையாளப் படுத்துவதிலும், அவர்களை ஊக்கப்படுத்துவதும் பிற சமூகத்தினருக்கு இடையில் நல்லிணக்கத்தை வளர்த்தெடுப்பதும் சமூக நீதி, சமத்துவம், பண்மைத்துவம், மதசார்பின்மை, மொழி-இன உரிமைகள் போன்றவற்றை முன்னிறுத்தி பாடுபடும் சான்றோரை சிறப்பிப்பதும் விடுதலை சிறுத்தைகளின் கடமை என்கிற வகையில் இந்த விழா ஆண்டு தோறும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஒருங்கிணைக்கப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி நாராயண சாமி, இரா.நல்லக்கண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திபங்கர் பட்டாச்சார்யா உள்பட 99 சான்றோருக்கு இதுவரை விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து விடுதலை சிறுத்தை நிர்வாகிகள், தொண்டர்கள் சென்னையில் குவிந்துள்ளனர்.

விருதுகளை பெரும் சான்றோர்கள் ஏற்புரை நிகழ்த்துகிறார்கள்.

Tags:    

Similar News