தமிழ்நாடு

விஜய் பிறந்த தினத்துக்கான 'ஹேஷ்டேக்' இணையத்தில் வைரலானது- சிறப்பு அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

Published On 2024-05-25 06:23 GMT   |   Update On 2024-05-25 07:22 GMT
  • நடிகர் விஜய் ரசிகர்கள் தங்களது பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். விஜய் படங்கள், அவருடன் ஏற்பட்ட இனிமையான அனுபவங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
  • நடிகர் விஜய் நடித்து வரும் 'தி கோட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அந்த படம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாக இருக்கிறது.

சென்னை:

நடிகர் விஜய்யின் 50-வது பிறந்த தினம் அடுத்த மாதம் (ஜூன்) 22-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு கொண்டாடும் முதல் பிறந்த நாள் என்பதால் இதை மிக மிக கோலாகலமாக நடத்த அவரது ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள் விரும்புகிறார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை அவரது ரசிகர்கள் இப்போதே செய்ய தொடங்கி விட்டனர். அதன் ஒரு பகுதியாக விஜய் பெயரில் ஹேஷ்டேக் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த ஹேஷ்டேக் சமூக வலைதள பக்கங்களில் டிரெண்டிங்காக மாறி உள்ளது. கடந்த 2 தினங்களாக அந்த ஹேஷ்டேக் வைரலாக மாறி இருக்கிறது.

அதில் நடிகர் விஜய் ரசிகர்கள் தங்களது பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். விஜய் படங்கள், அவருடன் ஏற்பட்ட இனிமையான அனுபவங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

நடிகர் விஜய் நடித்து வரும் 'தி கோட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அந்த படம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாக இருக்கிறது.

அதற்கு முன்னதாக நடிகர் விஜய் நடத்தும் அரசியல் மாநாடு பிரமாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

அதற்கு முன்னதாக மற்றொரு மிகப்பெரிய பணியை செய்து முடிக்க நடிகர் விஜய் தயாராகி வருவதாக தெரிய வந்துள்ளது. பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்க நடிகர் விஜய் முடிவு செய்திருக்கிறார்.

அவர் கட்சி தொடங்குவதற்கு முன்பு கடந்த ஆண்டு, 10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 234 தொகுதிகளிலும், முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளை அழைத்து பாராட்டு விழா நடத்தினார். அவர்களுக்கு சான்றிதழும், தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையும் வழங்கினார்.

அப்போது, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்தார். மாணவ-மாணவியரை விஜய் ஊக்கப்படுத்திய சம்பவம் ஒருபக்கம் அரசியலாக பார்க்கப்பட்டாலும், மறுபக்கம் நாடு முழுவதும் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டு பிளஸ் 2, மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான போது தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியருக்கு வாழ்த்துத் தெரிவித்த விஜய், 'விரைவில் நாம் சந்திப்போம்' என தனது 'எக்ஸ்' வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதனை அடுத்து, விஜய் கட்சி நிர்வாகிகள், அந்தந்த தொகுதிகளில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவியரின் பெயர் பட்டியலை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது அந்த பணிகள் நிறைவு பெற்று, அனைத்து தொகுதிகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவியரின் பெயர் பட்டியல் கட்சி தலைமைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இதுகுறித்து விஜய் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், மாணவர்களின் பட்டியலை தயார் செய்து கட்சி தலைமைக்கு அனுப்பி விட்டோம். அதுமட்டு இல்லாமல், மாணவர்களின் சுயவிவரங்கள், பெற்றோர் பெயர், வங்கிக் கணக்கு விவரங்களையும் பெற்று தலைமைக்கு அனுப்பி இருக்கிறோம். அடுத்த மாதம் விஜய், மாணவர்களை சந்திக்க இருக்கிறார்.

வார இறுதி நாளில் விஜய் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆனால், இதுவரை தேதி இறுதி செய்யப்படவில்லை. அந்த சந்திப்பின் போது, கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும், தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவியருக்கு விஜய் தலா ரூ.5 ஆயிரம் பரிசு வழங்க இருக்கிறார் என்றனர்.

Tags:    

Similar News