தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 118 அடியாக சரிவு

Published On 2022-09-26 04:22 GMT   |   Update On 2022-09-26 04:22 GMT
  • ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.
  • மேட்டூர் அணைக்கு நேற்று காலை 9 ஆயிரத்து 62 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 9 ஆயிரத்து 27 கனஅடியாக சரிந்தது.

மேட்டூர்:

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஒனேக்கலுக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் படிப்படியாக சரிந்து வருகிறது. ஒகேனக்கலில் தற்போது சுமார் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. ஆனாலும் ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அமர்ந்து உற்சாகமாக சவாரி சென்று மகிழ்ந்தனர். அதே போல பலர் எண்ணெய் மசாஜ் செய்து காவிரி ஆற்றில் குளித்தனர். மீன் வறுவல் மற்றும் மீன் குழம்புடன் கூடிய உணவுக்கான ஆர்டர் அதிக அளவில் இருந்ததால் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு உணவு சமைத்து தரும் பணிகள் ஜோராக நடந்தது. மேலும் ஒகனேக்கல் பகுதியில் உள்ள கடைகளிலும் வியாபாரம் களை கட்டியது.

பிரதான அருவி பகுதியில் வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் சேதம் அடைந்தன. அதை சீரமைத்த பின்னரே பிரதான அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்பதால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 9 ஆயிரத்து 62 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 9 ஆயிரத்து 27 கனஅடியாக சரிந்தது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 900 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

நேற்று 119.20 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 118.94 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரியும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News