தமிழ்நாடு

டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து தொலைபேசி எண்கள் அறிவிப்பு

Published On 2023-11-20 04:51 GMT   |   Update On 2023-11-20 04:51 GMT
  • தமிழகத்தில் இந்த ஆண்டில் 6,818 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டனர்.
  • கடந்த 18 நாட்களில் மட்டும் 816 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு உள்ளது.

சென்னை:

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ்.-எஜிப்டை வகை கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வருகின்றன. தமிழகத்தில் இந்த ஆண்டில் 6,818 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டனர்.

அதில் 10 பேர் உயிரிழந்ததாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

மாநிலம் முழுவதும் கடந்த 18 நாட்களில் மட்டும் 816 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது மருத்துவ மனைகளில் 583 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மற்றொரு புறம், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்புப் பணிகளில் 27 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் உள்ளாட்சிக்கு ஒரு சுகாதார அலுவலரும், மாநகராட்சிகளில் தெருக்களின் அடிப்படையில் சுகாதார அலுவலர்களும் நியமிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல் பாதிப்பு மற்றும் கொசு பாதிப்பு இருந்தால் 94443 40496, 87544 48477 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு 104 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், குறிப்பாக வீடுகள் தோறும் கண்காணிப்பை முன்னெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எத்தகைய சூழலையும் எதிர்கொண்டு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ மனைகளில் டெங்கு வார்டுகளையும், படுக்கைகளையும் அமைத்து போதிய மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ரத்த வங்கிகளையும் தயார் நிலையில் வைத்திருக்கவும், அவசரகால சூழல்களைச் சமாளிக்கும் வகையில் விரைவு உதவிக் குழுக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News