உள்ளூர் செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் நில அதிர்வு: 500-க்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் தவிப்பு: பீதியுடன் சாலையில் திரண்டனர்

Published On 2023-07-29 09:02 GMT   |   Update On 2023-07-29 09:21 GMT
  • கடந்த 2019-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த குடியிருப்பு 3 பிளாக்குகளை கொண்டதாகும்.
  • கடந்த 2021-ம் ஆண்டு இந்த குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அம்பத்தூர்:

கொரட்டூர் போலீஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த குடியிருப்பு 3 பிளாக்குகளை கொண்டதாகும். இங்கு 1000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். குடியிருப்பு மொத்தம் 9 தளங்களை கொண்டதாகும்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் 2 பிளாக்குகளில் 8-வது தளத்தில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகளில் வசித்தவர்கள் தூக்கத்தில் இருந்து அலறியடித்துக் கொண்டு எழும்பினார்கள். தங்களது குழந்தைகள் வீட்டில் இருந்த பெரியவர்களை அழைத்துக் கொண்டு அவசரம் அவசரமாக கீழே இறங்கினர்.

பின்னர் ஒலி பெருக்கி மூலமாக அறிவித்து 8 மாடியில் வசித்த மற்றவர்களையும் கீழே இறங்கி வருமாறு தெரிவித்தனர்.

இதனால் சுமார் 500-க் கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் நள்ளிரவில் தங்களது வீடுகளை விட்டு கீழே இறங்கி சாலையில் திரண்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று அதிர்வு ஏற்பட்டதாக கூறப்பட்ட கட்டிடத்தில் ஆய்வு செய்தனர். இது தொடர்பாக வானிலை மற்றும் அது தொடர்பான அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

இதில் நிலநடுக்கம் போன்று எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதியானது. இதன் பிறகே சாலையில் திரண்டு நின்ற குடியிருப்பு வாசிகள் அதிகாலை 5 மணிக்கு பிறகே தங்களது வீடுகளுக்கு சென்றனர்.

இது தொடர்பாக குடியிருப்போர் நல சங்க நிர்வாகியான லட்சுமி நாராயணன் கூறும்போது, நில அதிர்வு காரணமாக வீடுகள் குலுங்கவில்லை என்று அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். அப்படியென்றால் கட்டிடத்தில் அதிர்வு ஏற்பட்டது ஏன்? அதற்கான காரணம் என்ன? என்பதை கண்டுபிடித்து விளக்க வேண்டும் என்றார்.

குடியிருப்பு வாசியான ஜெயபிரகாஷ் கூறும்போது, கட்டிடத்தில் அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்ததும் மாடியில் இருந்து இறங்கி கீழே ஓடி வந்தோம். இங்கு 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருவதால் அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் நில அதிர்வுக்கான காரணத்தை கண்டறிந்து தெளிவு படுத்த வேண்டும் என்றார்.

அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் வாயு காரணமாக வீட்டில் உள்ள பொருட்கள் துருப்பிடித்து போவதாக அங்கு வசிப்பவர்கள் தெரிவித்தனர். சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் காரணமாக அதிர்வு ஏற்பட்டு உள்ளதா? என்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

கடந்த 2021-ம் ஆண்டு இந்த குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது கட்டிட வல்லுனர்கள் ஆய்வு செய்து அடுத்த 20 ஆண்டுகளுக்கு கட்டிடம் உறுதியாக இருக்கும் என்று தரச் சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள நில அதிர்வு குடியிருப்பு வாசிகளை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

Similar News