தமிழ்நாடு

கரூரில் 80,755 பேருக்கு நலத்திட்ட உதவிகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Published On 2022-07-02 06:06 GMT   |   Update On 2022-07-02 06:06 GMT
  • முதலமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கரூர்:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் முதலமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் நேற்று மாலை வருகை தந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த அவர் கார் மூலம் கரூருக்கு வருகை தந்தார்.

இதையடுத்து மாவட்ட எல்லையான குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம், மாயனூர், வெங்ககல்பட்டி ஆகிய நான்கு இடங்களில் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் கட்சியினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

பின்னர் கரூர் கலெக்டர் அலுவலகம் அருகாமையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முனைவோர்கள் மற்றும் வர்த்தகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஜவுளி உற்பத்தி, கொசுவலை தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் வளர்ச்சி குறித்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்றார். அதன் பின்னர் இரவு அதே மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையின் முக்கிய நிகழ்வான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் கரூர் திருமாநிலையூர் பஸ் டெப்போ அருகிலுள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. விழாவுக்கு கலெக்டர் டாக்டர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார். அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வரவேற்று பேசினார்.

இதில் தமிழக முதலமைச்சர் மு .க.ஸ்டாலின் கலந்துகொண்டு 80 ஆயிரத்து 755 பயனாளிகளுக்கு ரூ.500.83 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ரூ.518.44 கோடியில் 99 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். அது மட்டுமில்லாமல் ரூ.28.60 கோடியில் முடிவுற்ற 95 திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

முன்னதாக பயணியர் மாளிகையில் இருந்து விழா நடைபெற்ற திருமாநிலையூர் வரையிலும் வழிநெடுக 23 இடங்களில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உற்சாகமாக ஏற்றுக் கொண்டு அவர்களை பார்த்து கையசைத்தவாறு வந்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற விழா மேடையில் நடைபெற்ற நிகழ்வினை பொதுமக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் ஆங்காங்கே எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதன் மூலம் விழா பந்தலுக்கு வெளியே இருந்த மக்களும் நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருவதற்கு தனி பாதையும், முதலமைச்சரின் வாகனம் வருவதற்கு தனியாகவும் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்த அந்த நேரத்தில் பந்தல் முன்பு அமர்ந்திருந்த அத்தனை பயனாளிகளுக்கும் ஒரே நேரத்தில் நலத்திட்ட உதவிகள் கொண்டு சேர்க்கப்பட்டன.

திருமாநிலையூர் அரசு விழா நிறைவு பெற்றதும் நாமக்கல் பொம்மை குட்டை மேட்டில் நாளை நடைபெறும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார். செல்லும் வழியில் அரவக்குறிச்சி தொகுதி சார்பில் வேலாயுதம்பாளையத்தில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News