தமிழ்நாடு

தெற்கு ரெயில்வேயில் அனைத்து ரெயில்களும் ஓடத்தொடங்கின-பயணிகளிடம் இயல்பு நிலை திரும்பியது

Published On 2022-08-05 05:30 GMT   |   Update On 2022-08-05 07:29 GMT
  • கடந்த வாரம் தெற்கு ரெயில்வேயில் மேலும் 6 பயணிகள் ரெயில் சேவைகள் தொடங்கப்பட்டன.
  • தமிழகத்தில் 324 பயணிகள் ரெயில்கள் உள்பட மொத்தம் 910 ரெயில்கள் இயக்கப்பட்டன.

சென்னை:

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன. அதன்பிறகு கொரோனா தொற்று குறையத்தொடங்கியவுடன் அனைத்து ரெயில்களும் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களாக கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த வாரம் தெற்கு ரெயில்வேயில் மேலும் 6 பயணிகள் ரெயில் சேவைகள் தொடங்கப்பட்டன.

இதன்மூலம் தெற்கு ரெயில்வேயில் அனைத்து ரெயில்களும் ஓடத் தொடங்கின. இதனால் பயணிகளிடையே இயல்பு நிலை திரும்பியது.

இதேபோல் மற்ற மண்டலங்களில் இன்னும் 4 ரெயில் சேவைகள் இயக்கப்பட வேண்டும். அந்த 4 ரெயில் சேவைகள் தொடங்கியவுடன் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில் சேவைகள் முழுமையான நிலைக்கு திரும்பி விடும்.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கணேசன் கூறியதாவது:-

தமிழகத்தில் 324 பயணிகள் ரெயில்கள் உள்பட மொத்தம் 910 ரெயில்கள் இயக்கப்பட்டன. தெற்கு ரெயில்வேயில் 324 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 310 பயணிகள் ரெயில்களை இயக்குகிறது. கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட இந்த ரெயில்கள் மற்றும் சிறப்பு சேவைகளாக இயக்கப்பட்ட ரெயில்கள் பல்வேறு கட்டங்களாக மீண்டும் தொடங்கப்பட்டன.

அதேநேரத்தில் மற்ற மண்டலங்களில் கொரோனா தொற்றுக்கு முன்பு 276 ரெயில்கள் இயக்கப்பட்டன. அதில் தற்போது 272 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இன்னும் 4 ரெயில்கள் இயக்கப்பட்டால் மீண்டும் முழுமையாக ரெயில் சேவை தொடங்கிவிடும்.

அதேநேரத்தில் தென் கிழக்கு ரெயில்வே சார்பில் இயக்கப்படும் சென்னை சென்ட்ரல்-சிம்லா எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து இன்னும் தொடங்கப்பட வில்லை.

இந்திய ரெயில்வே முடிவு காரணமாக பயணிகள் ரெயில்கள், எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரெயில்களாக மாற்றப்பட்டதால் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News