தமிழ்நாடு

வடமாநிலங்களில் தொடர்மழை- 75 ஆயிரம் லாரிகள் நிறுத்தம்

Published On 2022-08-06 05:16 GMT   |   Update On 2022-08-06 05:16 GMT
  • மத்திய, மாநில அரசுகள், டீசல், சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும்.
  • வடமாநிலங்களுக்கு சரக்குகளை எடுத்துச் செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

சேலம்:

தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் லாரிகளில் 75 ஆயிரம் லாரிகள் தொடர் மழையால் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு ரூ. 50 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்தாக அதன் உரிமையாளர்கள் கூறி வருகிறார்கள். இதனால் லாரி தொழிலில் மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்னமேளன பொருளாளர் தன்ராஜ் கூறியதாவது-

தமிழகத்தில் 4.40 லட்சம் லாரிகள் உள்ளன. அதில் டீசல், சுங்க கட்டணம், இன்சூரன்ஸ், டயர் உள்ளிட்ட உதிரிபாக விலை உயர்வால், தொழிலை தொடரமுடியாமல், ஒரு லட்சம் லாரிகள்உ டைப்புக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இயக்கத்தில் உள்ள லாரிகளில், கொரோனா கால தொழில்நெருக்கடியால், ஏற்கனவே, 1.25லட்சம் லாரிகள், 'லோடு' கிடைக்காமல் ஸ்டாண்டுகளில் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 2-ம் வாரத்தில் மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொட்டித்தீர்த்த கன மழையால், பாலங்கள் அடித்துச்செல்லப்பட்டு, வாகனங்களை இயக்க முடியாமல் 30 ஆயிரம் லாரிகள், வடமாநிலங்களுக்கு சரக்குகளை எடுத்துச் செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போது தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, ஆந்திர மாநிலங்களில் பெய்யும் தொடர் மழையால், லாரிகளில் ஏற்றிய, லோடுகளை இறக்க முடியாமல், ஏற்றிய சரக்குகளை குறிப்பிட்ட நேரத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் 25 ஆயிரம் லாரிகள் தவிக்கின்றன.

இந்த மழையால், தமிழகத்தில் கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கி இதுவரை 75 ஆயிரம் லாரிகள், லோடு கிடைக்காமல் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு, ரூ.50 லட்சம் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு, டிரைவர், கிளீனர் உள்ளிட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

உரிமையாளர்கள் நலன் கருதி, லாரிகளுக்கு பெற்ற கடனுக்கு தவணை தொகையை செலுத்த வங்கிகள், நிதி நிறுவனங்கள், கால அவகாசம் வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், டீசல், சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும். தமிழக அரசு, லாரிகளுக்கு ஒளிரும் பட்டை விவகாரத்தில் உள்ள இடர் பாடுகளை நீக்கி, இத்தொழிலை காக்க வேண்டும் என சங்க நிர்வாகிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

Similar News