தமிழ்நாடு

சீமான்

இலவசங்களால் நாடு முன்னேறி இருக்கிறது என்று நிரூபிக்க முடியுமா?- நிதியமைச்சருக்கு சீமான் கேள்வி

Published On 2022-08-18 10:08 GMT   |   Update On 2022-08-18 10:08 GMT
  • இந்தியாவில் விவசாயிகளை பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கிறார்கள்.
  • பா.ஜ.க.வும், காங்கிரசும் இருவேறு கட்சிகள். ஆனால் கொள்கைகள் ஒன்றுதான்.

திருச்சி:

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2018-ல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் ஒரே விமானத்தில் வந்து இறங்கினர். அப்போது இருதரப்பு தொண்டர்களுக்கும் இடையே தங்களது தலைவர்களை வரவேற்பதில் ஏற்பட்ட மோதலால் ம.தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் வெல்லமண்டி சோமு தாக்கப்பட்டார்.

இது தொடர்பாக கே.கே.நகர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சீமான் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது திருச்சி ஜூடிசியல் 6-வது கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்று சீமான் கோர்ட்டில் ஆஜனார்

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக நிதியமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜன் நன்கு படித்தவர். அவர் மனசாட்சியோடு பேச வேண்டும். இலவசங்களால் ஒரு நாடு வளர்ந்திருக்கிறது என அவரால் நிருபிக்க முடியுமா? இப்போதே தமிழக அரசுக்கு ரூ.6.30 லட்சம் கோடி கடன் இருக்கிறது. இதற்கு மேல் எதற்கு வெற்று பசப்பு அறிக்கைகள்.

இந்தியாவில் விவசாயிகளை பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கிறார்கள். வருடத்துக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை கொடுப்பது துயரமானது, அவமானகரமானது. இதில் பெருமை அடைய ஒன்றும் இல்லை. தமிழகத்தில் ரேஷன் கடையில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதனை எத்தனை ஆண்டுகளுக்கு கொடுக்கப்போகிறார்கள்.

பா.ஜ.க.வும், காங்கிரசும் இருவேறு கட்சிகள். ஆனால் கொள்கைகள் ஒன்றுதான். சவுண்டு இந்துத்துவா, பி.ஜே.பி. என்றால், சாப்ட் இந்துத்துவா இந்த காங்கிரஸ். காங்கிரசும், தி.மு.க.வும் இஸ்லாமியர்களுக்கு தங்களைத் தவிர வேறு வேறு நாதியில்லை என்று கருதுகிறார்கள். அவர்கள் பி.ஜே.பி.க்கு வாக்களிப்பது இல்லை. பாஜக பெற்று வரும் இந்து வாக்குகளை கவருவதற்காக 90 சதவீத இந்துக்கள் எங்கள் கட்சியில் இருக்கிறார்கள் என மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.

வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி சொல்கிறார். சுதந்திர கொடியை கையில் பிடிக்கும் தகுதி பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.க்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News