தமிழ்நாடு

கலவரம் செய்ய திட்டமிட்டு வந்ததுபோல் தெரிகிறது- டிஜிபி சைலேந்திர பாபு தகவல்

Published On 2022-07-17 07:18 GMT   |   Update On 2022-07-17 07:18 GMT
  • கலவரம் கட்டுக்கடங்காமல் போனதால், தீயணைப்பு வாகனங்கள்கூட உள்ளே வர முடியாத நிலை உள்ளது.
  • போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும்படி டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி:

சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு, மாணவர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் இன்று நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதுடன், பள்ளி வளாகத்திற்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்தனர். போலீசார் பாதுகாப்பு அளித்தால்தான் உள்ளே சென்று தீயை அணைக்க முடியும். ஆனால், கலவரம் கட்டுக்கடங்காமல் போனதால், தீயணைப்பு வாகனங்கள்கூட உள்ளே வர முடியாத நிலை உள்ளது.

இதற்கிடையே, போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பின்போது கூறியதாவது:-

மாணவி எழுதி வைத்த கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது. மாணவி இறந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேக மரணம் என்றே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளி மீது தாக்குதல் நடத்த முயன்றதை அடுத்து காவலர்கள் அவர்களை தடுக்க முயன்றனர். எனினும், போலீசார் மீது போராட்டக்காரர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

வன்முறை கண்டிக்கத்தக்கது. கவலரம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோ காட்சிகளை வைத்து கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும். புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.

மாணவி உயிரிழந்த விவகாரத்தில் ஆதாரங்கள் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். பொருட்களை சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அப்பகுதியில் இருப்பவர்கள் அமைதி காக்க வேண்டும். அமைதியாக போராடுவதாக கூறினார்கள். ஆனால், அவர்கள் திட்டமிட்டு வந்ததுபோல் தெரிகிறது. சமூக வலைத்தளங்களில் யாரும் தவறான தகவல்களை பரப்பவேண்டாம். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News