தமிழ்நாடு

சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு- சிவகாஞ்சி போலீஸ் விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2022-07-23 08:30 GMT   |   Update On 2022-07-23 08:30 GMT
  • சிவகாஞ்சி போலீசாருக்கு காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
  • வழக்கு தொடர்பான ஆவணங்களை சிவகாஞ்சி போலீசாரிடம் ஒப்படைக்கும்படி சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிடுகிறேன்.

சென்னை:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் சிலையில் சில சேதங்கள் இருந்ததால், புதிதாக தங்க சிலை செய்யப்பட்டது.

இதற்காக 100 கிலோ தங்கம் வசூலிக்கப்பட்டும், சிலையில் ஒரு சதவீதம் கூட தங்கம் இல்லை என்று அண்ணாமலை என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிந்து விசாரிக்க, சிவகாஞ்சி போலீசாருக்கு காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை அப்போதைய ஆணையர் வீர சண்முகமணி, திருப்பணிப்பிரிவு கூடுதல் ஆணையர் கவிதா, சிலையை வடிவமைத்த ஸ்தபதி முத்தையா, ஸ்தனிகர்கள் உள்ளிட்ட 9 பேர் மீது 2018-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை, கடந்த 2019-ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு, விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கூடுதல் ஆணையர் கவிதா, முத்தையா ஸ்தபதி உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு, நன்கொடையாளர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ததை தவிர வேறு எந்த விசாரணையும் மேற்கொள்ளாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், வழக்கை மீண்டும் சிவகாஞ்சி போலீசார் விசாரணைக்கு மாற்றுகிறேன் .

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு மீது நம்பிக்கை வைத்து இந்த வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டு அனுமதித்த நிலையில், 4 ஆண்டுகளாக எந்த விசாரணையும் நடத்தவில்லை.

வழக்கு தொடர்பான ஆவணங்களை சிவகாஞ்சி போலீசாரிடம் ஒப்படைக்கும்படி சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு உத்தர விடுகிறேன்.

இந்த வழக்கின் விசாரணையை 90 நாட்களில் முடித்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News