தமிழ்நாடு

கவர்னர் மாளிகை

கவர்னர் மாளிகை விரைவில் மக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறது- கவர்னர் ஆர்.என்.ரவி நடவடிக்கை

Published On 2022-10-17 09:37 GMT   |   Update On 2022-10-17 09:37 GMT
  • நவராத்திரி கொலுவைப் பார்வையிட 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை தினமும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
  • பொதுமக்களின் பார்வைக்கு கவர்னர் மாளிகை விரைவில் திறக்கப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை:

சென்னை கிண்டியில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னரின் அதிகாரப்பூர்வ இல்லம், கவர்னர் மாளிகை அலுவலகங்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் குடியிருப்புகள் உள்ளன.

தங்குமிடங்கள், கவர்னரின் செயலகம் ஆகியவை சமகால பயன்பாட்டுக்காக புதுப்பிக்கப்பட்ட வரலாற்றுக் கட்டிடங்கள் ஆகும். கவர்னர் செயலகத்தின் அன்றாட அச்சுத்தேவைகளை நிறைவு செய்யும் பாரம்பரிய நினைவுச் சின்னமாக கவர்னர் மாளிகையிலுள்ள அச்சகம் செயல்படுகிறது.

இருபத்தைந்தாண்டு நினைவு பூந்தோட்டம், நீள் உருண்டை வடிவிலான பூந்தோட்டம் மற்றும் மூலிகைத் தோட்டம் போன்ற ஏராளமான அலங்கார தோட்டங்கள் கவர்னர் மாளிகை வளாகத்தை அலங்கரிக்கின்றன.

கவர்னர் மாளிகையின் நுழைவுவாயில் அருகே நீரூற்றுகள் மற்றும் வர்ணம் பூசப்பட்ட சுவர்களைக்கொண்ட அலங்காரத் தோட்டம், கிண்டி தேசிய பூங்காவில் உள்ள அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை சித்தரிக்கிறது.

மேலும். 'பழைய மெட்ராசின்' ஒருங்கிணைந்த பண்பாடு மற்றும் கட்டிடக்கலை சிறப்புகளின் கம்பீரமான தோற்றத்தை தொடர்ச்சியாக காண்பிக்கும் கலைச்சின்னமாக விளங்குகிறது.

கவர்னர் மாளிகையைப் பொருத்தவரை மிகவும் பாதுகாப்பான பகுதி என்பதால் பொதுமக்களுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், முதல்முறையாக கவர்னர் மாளிகையில் நவராத்திரியை முன்னிட்டு கொலு கண்காட்சி அமைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சியை கவர்னர் ஆர்.என்.ரவியின் மனைவி லட்சுமி ரவி ஆகியோர் கடந்த கடந்த மாதம் (செப்டம்பர்) 26-ந் தேதி திறந்து வைத்தனர். நவராத்திரி கொலுவானது பிரபலங்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினரின் பாராட்டுகளைப் பெற்றது.

மேலும், நவராத்திரி கொலுவைப் பார்வையிட 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை தினமும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கவர்னர் மாளிகை வரலாற்றில் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு பொதுமக்கள் மாளிகையாக இந்த மாளிகை மாறியது இதுவே முதல் முறையாகும்.

கவர்னர் மாளிகையில் மாணவர்களுக்கு அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு ஆகஸ்டு 15-ந் தேதி பரிசுகள் வழங்கப்பட்டன.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் ஆர்வலர்களையும், சமுதாயப் பணியில் சிறந்து விளங்குபவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் கவர்னர் ஆர்.என்.ரவியால் முதல் முறையாக பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல பொதுமக்களின் பார்வைக்கு கவர்னர் மாளிகை விரைவில் திறக்கப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான ஆயத்தப் பணியை கவர்னர் மாளிகை மேற்கொண்டு வருகிறது.

Tags:    

Similar News