தமிழ்நாடு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கூலி தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்- 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது

Published On 2022-10-11 10:36 GMT   |   Update On 2022-10-11 10:36 GMT
  • சிவலிங்கம் உடலில் இருந்து கல்லீரல், 2 சிறுநீரகங்கள், கண்கள், இதய வால்வு ஆகிய உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு தமிழக அரசு உறுப்புமாற்று அறுவை சிகிச்சை ஆணையத்திடம் வழங்கப்பட்டது.
  • உடல் உறுப்புகளை தானம் செய்த சிவலிங்கத்தின் உடலுக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரி டீன் பாலாஜி மற்றும் மருத்துவர்கள் மாலை அணிவித்தனர்.

சென்னை:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் (42). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி வீரம்மாள் என்ற மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சிவலிங்கம் செல்லும்போது ஆரம்பாக்கம் அருகில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு எளாவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார்.

அதனைத்தொடர்ந்து அவரது உறவினர்களின் முழு சம்மதத்துடன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதற்கான ஏற்பாடுகளை மருத்துவ குழுவினர் செய்தனர்.

சிவலிங்கம் உடலில் இருந்து கல்லீரல், 2 சிறுநீரகங்கள், கண்கள், இதய வால்வு ஆகிய உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு தமிழக அரசு உறுப்புமாற்று அறுவை சிகிச்சை ஆணையத்திடம் வழங்கப்பட்டது.

அந்த ஆணையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் நோயாளிகளுக்கு சிவலிங்கத்தின் உடல் உறுப்புகள் உறுப்பு மாற்று சிகிச்சையின் மூலம் பொருத்தப்படும். அவரது உடல் உறுப்புகள் மூலம் 6 பேருக்கு மறு வாழ்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

முன்னதாக உடல் உறுப்புகளை தானம் செய்த சிவலிங்கத்தின் உடலுக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரி டீன் பாலாஜி மற்றும் மருத்துவர்கள் மாலை அணிவித்தனர்.

Tags:    

Similar News