தமிழ்நாடு

வானிலை முன்அறிவிப்பை துல்லியமாக கணக்கிட கட்டமைப்பு விரிவாக்கம்- சென்னை மண்டல அதிகாரி தகவல்

Published On 2023-03-11 04:59 GMT   |   Update On 2023-03-11 04:59 GMT
  • தமிழகம் முழுவதும் தானியங்கி மழை அளவீடுகள் மற்றும் வானிலை நிலையங்களை நிறுவ புதிய இடங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது.
  • சென்னையில் 12 தானியங்கி மழை மானியும், தானியங்கி வானிலை நிலையமும் உள்ளன.

சென்னை:

சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி நிறுவனம் வானிலை முன் அறிவிப்பை தெளிவாக கணக்கிட்டு துல்லியமாக வெளியிட பல்வேறு தொழில்நுட்பங்களை பின்பற்றுகிறது. மேலும் துல்லியமாக கணக்கிட அதன் கட்டமைப்பை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் தானியங்கி மழை அளவீடுகள் மற்றும் வானிலை நிலையங்களை நிறுவ புதிய இடங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது.

சென்னையில் 12 தானியங்கி மழை மானியும், தானியங்கி வானிலை நிலையமும் உள்ளன. இதுபோல் நகர்ப்புறங்களில் கூடுதல் நிலையங்களை அமைப்பதன் மூலம் நகர்ப் பகுதிகளில் பிரத்யேகமாக வானிலை மாற்றங்களை துல்லியமாக கண்டறிய உதவும்.

இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் கூடுதல் இயக்குனர் எஸ். பாலச்சந்திரன் கூறியதாவது:

வானிலை முன்அறிவிப்பு நுட்பங்களை மேம்படுத்தவும் ரேடார் தரவுகளை பகுப்பாய்வு செய்யவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரத்தால் குறுகிய நேரத்தில் முன் அறிவிப்பு கணிப்புகளை இப்போது உள்ளதை விட மேம்படுத்த முடியும்.

வானிலை முன் அறிவிப்பு முன்பு வட தமிழகம், தென் தமிழகம், மாவட்ட அளவில் கணித்து கூறப்பட்டு வந்தது. தற்போது சென்னையில் எந்த பகுதியில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என்பதை கணித்து கூற முடியும்.

இந்த புதிய தொழில் நுட்பம் கடந்த ஆண்டு சென்னையில் நடை முறைப்படுத்தப் பட்டது.

ரேடார் புள்ளி விவர தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அடுத்த சில மணி நேரங்களில் எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என்பதை துல்லியமாக முன் அறிவிப்பு செய்ய முடியும்.

மற்ற மாவட்டங்களுக்கும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்துகிறோம். தற்போது சென்னையில் 2 ரேடாரும், காரைக்காலில் ஒரு ரேடாரும் உள்ளன. தமிழக அரசு சார்பில் சேலம், ராமநாதபுரத்தில் 2 ரேடார்களை அமைக்க உள்ளது.

இனி வரும் காலங்களில் எந்த பகுதியில் மேகம், இடி, மின்னல் இருக்கிறது என்பதை ஆய்வு செய்து அது எந்த பக்கம் நகர்ந்து சென்று மழையை தரும் என்பதை துல்லியமாக கூறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News